சிகரெட் ஒன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரித்து, அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒதுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,
2019 முதல் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும், சிகரெட்டின் விலையை 20 ரூபாவால் அதிகரித்தால், திறைசேரிக்கு வருடாந்தம் மேலதிக வருமானமாக 50 பில்லியன் ரூபாய் கிடைக்கும். மேற்படி அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டு இருந்தால், அரசாங்கத்திற்கு 2021 மற்றும் 2022 க்கு இடையில் 100 பில்லியன் ரூபாவை வசூலித்து இருக்க முடியும்.
ஆசிரியரின் சம்பள ஒழுங்கின்மையை தீர்க்க 55 பில்லியன் ரூபாய் போதுமானதாகும். மேலும், புகையிலையால் நாளாந்தம் 50 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். அத்துடன் வருடாந்தம் 22,000 பேர் இறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவை எடுப்பதில் ஏனைய துறைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் பிரச்சினையை விரைவாக தீர்க்க முடியாது. வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளதுடன், சிகரெட்டின் விலையை உயர்த்துவதற்கான பரிந்துரைக்காக பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.