தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால் முதலாளிமார் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.அதனால் கம்பனிகாரர்களின் நடவடிக்கைக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து்ளதாக அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேருநர்களை பதிவு செய்தல் மற்றும் ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அடிப்படை சம்பளத்தை மையமாகக்கொண்டு தான் வாழ்க்கைச் செலவை கணிக்கவேண்டும். 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் முறைசார் தனியார் துறையின் அடிப்படைச் சம்பளம் 4.2 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. முறைசாரா தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளமும் 2.7 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இதன்மூலம் வாழ்க்கைச் செலவு குறித்த அளவிட அடிப்படைச் சம்பளம் எவ்வளவு அவசியம் என்பதை இதன்மூலம் உணர்ந்துக்கொள்ள முடியும்.
அதனால் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவித்து வருகின்றோம். அதன் பிரகாரமே தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. முதலாளிமாருடன் இதுதொடர்பாக பல சுற்று பேச்சுவார்தை மேற்கொண்டபோதும் அவர்கள் இதற்கு இணங்கவில்லை. அதனால் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் கம்பனிகாரர்கள் அதனை வழங்குவதில்லை. அதற்கு பல நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
அதேபோன்று 2020 மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளத்தை 500 ரூபாவில் இருந்து 700 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் வருகை கொடுப்பனவு, செயற்திறமை கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுதான் கம்பனிகள் செயற்படுகின்றன. முதலாளிமார்கள் இவ்வாறு செயற்படும்போது தோட்டங்களில் கலவவரங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. தோட்ட நிர்வாகிகளே பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
அத்துடன் தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழிற்சங்கங்களுக்கான சந்தா கழிக்கப்பட்டே சம்பளம் வழங்கப்படுகின்றது. பல நூறு வருடங்களாக இந்த நடைமுறையே இருந்து வருகின்றது. தற்போது முதலாளிமார் இதனை நிறுத்தி இருக்கின்றனர். இதனால் தொழிற்சங்கங்கள் செயலிழந்துள்ளன. தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநியாயங்களுக்கு குரல்கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளர்கள் முதலாளிமார்களுடன் பிரச்சினைக்கு செல்கின்றனர்.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே கம்பனிகள் இவ்வாறு செயற்படுகின்றனர். அதனால் கம்பனிகாரர்களின் பழிவாங்கல்களுக்கு இடமளித்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் தோட்ட கம்பனிகாரர்களுக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்புக்கு தயாராகுமாறு ஆளும், எதிர்க்கட்சியில் இருக்கும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.
அதனால் நாட்டுக்கு நட்டம் ஏற்படும் என்றாலும் வேறுவழியில்லை. அதேபோன்று கம்பனி காரர்களுக்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருக்கின்றது. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் பிரதி அரசாங்கத்திடமும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களத்திலும் இல்லை. அதனால் தோட்டக் கம்பனிகள் நினைத்த பிரகாரம் செயற்படுகின்றனர். அதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.
அத்துடன் எமது நாடு சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் சீ 190 என்ற சமவாயத்துக்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை. அதில் இருப்பது சேவை நிலையங்களில் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோருவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு பதவி உயர்வுகள் மற்றும் வேறு சலுகைகள் வழங்கப்படுவது சம்பந்தமானதாகும்.
அதனால் சேவை நிலையங்களில் பெண்களுக்கு ஏற்படுகின்ற துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான பாதுகாப்பை ஏற்படுத்த இந்த சமவாயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.