இலங்கை சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக மாறி இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
காலம் சென்ற முன்னாள் பிரதர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது நாடு இன்று சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக மாறி இருக்கின்றது. முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க எமது நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக்கொண்டே அனைத்து நடவடிக்கைகயும் மேற்கொண்டுவந்திருந்தார்.
நாட்டுக்காக பல தியாகங்களை மேற்கொண்டு நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தார். பண்டாரநாயக்கவின் கொள்கையையே அவர் முன்னெடுத்து சென்றார்.ஆனால் இன்றைய அரசியல் நடவடிக்கைகளால் மக்களுக்கு அரசியல் கசப்பாகி இருக்கிறது. அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை என்றார்.