மட்டக்களப்பில் இடம் பெற்று வரும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் இடம்பெற்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் ட்ரினி ஜோரானில் எஸ்கெடல் மற்றும் நெதர்லாந்து நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் தன்சா கோங்க்றிப் ஆகியோரை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் துரிதமாக முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டதுன், இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டது.
இதன் போது சாணக்கியன் விசேட கோரிக்கை ஒன்றினையும் முன்மொழிந்திருந்தார்.குறிப்பாக தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய குறித்த சந்திப்பானது சமகால அரசியல் பரிமாற்றத்துடன் முற்றுப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.