பாகம் 11: புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 11 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 11

தேசம்: புளொட்டின் மத்தியகுழுவில் பெரும்பாலான ஆட்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்படித்தானா?

அசோக்: அப்படியல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்ட ங்களை சேர்ந்தவங்கள்தான் அதிகம்.

இதில் தோழர் ஆதவன் மலையகம், வவுனியாவில் இருந்தவர். தோழர் முரளி வவுனியா. வாசுதேவா, ஈஸ்வரன், நான் மட்டக்களப்பு. பார்த்தன், ரகுமான்ஜான், கேதிஸ்வரன் கேசவன், திருகோணமலை. சலீம் மூதூர், சரோஜினிதேவி கிளிநொச்சி, ஆரம்ப காலம் யாழ்ப்பாணம் ஆக இருக்கலாம், இருக்கிற இடம் கிளிநொச்சி. ராஜன் பரந்தன், கிளிநொச்சி.

தேசம்: செந்தில்…

அசோக்: செந்தில் செட்டிகுளம், வவுனியா.

தேசம்: தீப்பொறியில் இருந்தவரா?

அசோக்: அதுல இல்ல உமா மகேஸ்வரனோடு கடைசி காலங்களில் முரண்பட்டு வெளியேறிவர்களில் இவரும் ஒருவர்.

தேசம்: மாறன்…

அசோக்: மாறன் ஆரம்ப காலத்தில் இருந்தவர். தெல்லிப்பளை என நினைக்கிறன். அவரைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 84 இராணுவத்தால கைது செய்யப்பட்டு ஜெ யிலில் இருந்தவர். பிறகு விடுதலையாகி புளொட்டில் வேலை செய்ததாக அறிந்தேன்.

தேசம்: இதைவிட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர்…கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருக்கிறார்கள்…

அசோக்: முதல் 17 பேர் தான். இது 83 கடைசில உருவாக்கப்படுது. 84 ஜனவரி மத்திய குழுவில் இரண்டுபேர் மேலதிகமாக, நானும் செல்வனும் பிரேரிக்கப்படுறம்…

தேசம்: ரெண்டு பேரையும் உள்ளுக்கு எடுக்கினமோ?

அசோக்: அதுல ஒரு சிக்கல் நடந்தது இரண்டு பேரும் பிரேரிக்கப்பட்டு நான் மட்டும் உள்வாங்கப்பட்டேன். செல்வன் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், செல்வனை சேர்க்கவில்லை. பிற்காலத்தில் நான், ரகுமான் ஜான் தோழரிடம் இதைப்பற்றி கேட்டேன்.

தேசம்: எதைப் பற்றி…

அசோக்: செல்வன் சேர்க்கப்படாததற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதென. ஏன் அவர் சேர்க்கப்பட வில்லை என்பது பற்றி. தற்சமயம் வேண்டாம், அவர் ஒரு பிரச்சனைக்குரிய ஆள் என்று, தோழர் பார்த்தன் கருத்து வைத்ததாகவும், அதனால்தான் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார்.

தேசம்: அவர் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பி வாரார்…

அசோக்: ஓம் திரும்பி வந்துட்டார். ஜனவரி சென்றல் கமிட்டியில் நான் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

தேசம்: இதுல கண்ணாடி சந்திரன் என்பது யார்?

அசோக்: அவர் கழகத்தில் எல்லா அதிகாரங்களுடனும் இருந்தவர். அவரைப்பற்றி பின்னாடி தளம் பற்றி வரும்போது கதைக்க வேண்டும். ஏனென்று கேட்டால், அவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உமாமகேஸ்வரன் விசுவாசி. தளத்தில் நடந்த தன்னிச்சையான பல செயற்பாடுகளுக்கு தவறான போக்குகளுக்கு முழுக்காரணமாக இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். அவருக்கு என்ன பொறுப்பு என்றே சொல்ல முடியாது. எல்லா அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. தளத்தில் ஒரு கட்டத்தில் ராணுவ பொறுப்பாளராக இருந்தார். பார்த்தன் இறந்த பின் இவரைத்தான் கட்டுப்பாட்டுக்குழு தள இராணுவப் பொறுப்பாளராக நியமனம் செய்யுது. எந்தவொரு இராணுவ பயிற்சியும், இராணுவக் கல்வியும் இல்லாத ஒருவர் இராணுவப் பொறுப்பாளாராக தளத்திற்கு நியமிக்கப்படுகின்றார் என்றால், நட்புக்காக அதிகார துபிரயோகம் எப்படி நடந்திருக்கு பார்த்தீங்களா? உலக போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்குமா…?

இந்த நேரத்தில பின் தளத்தில் இராணுவப்பயிற்சி எடுத்த, அரசியல் ரீதியில் வளர்ந்த தோழர்கள் பலர் இருந்தனர். என்ன நடந்தது என்றால், அந்த நேரத்தில் தளப் பொறுப்பாளராக தோழர் கேசவன் இருந்தார். தோழர் கேசவனுக்கும், தோழர் ரகுமான் ஜானுக்கும் கண்ணாடிச் சந்திரன் நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் நடந்தது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் எப்ப இயக்கத்தில் சேர்ந்தவர்?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு பிற்பாடு. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவர் பிறகுதான் இயக்கத்துக்கு வாரார்.

தேசம்: ஜூலைக் கலவரத்தில் வந்து 3 மாதத்திலேயே இயக்கத்தில் சேருகிறாரா?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர் பிறகு படிக்க போயிட்டார் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு. கலவரத்துக்குப் பிறகு அங்கு தொடர்ந்து படிக்கமுடியாத சூழல் வரும் போது, வேலை செய்ய வாரார். வந்து மூன்று நான்கு மாதத்திலேயே மத்திய குழுவில் வந்துட்டார். அவர் மத்திய குழுவுக்கு வந்ததே வியப்புக்குரியது ஏனென்றால், பழைய நீண்டகாலமாக முழு நேரமாக வேலைசெய்த பல தோழர்கள் இருந்தாங்க.

தேசம்: இதுக்குள்ள வேறு யாரும் இப்படி குறுகிய காலத்தில் மத்திய குழுவில் வந்தவர்களா?

அசோக்: இல்லை இவர் தான் முக்கியமானவர். மற்ற ஆட்கள் எல்லாம் நிறைய காலம் இயக்கத்துடன் வேலை செய்தவர்கள். இவர் தெரிவு தொடர்பான விமர்சனங்கள் தளத்தில் இருந்தது.

தேசம்: அது என்ன விமர்சனம்?

அசோக்: எத்தனையோ நீண்ட காலமாக வேலை செய்யும் தோழர்கள் தளத்தில் இருக்கும் போது இவர் தெரிவு செய்யப்பட்டால் விமர்சனங்கள் வரும்தானே. பழைய தோழர்கள் நிறைய பேர் இருந்தவர்கள் தானே. செல்வன் உள்வாங்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர் இருந்தவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். அகஸ்டின் செபமாலை அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் நீண்டகாலமாக. வரதன் மட்டகளப்பு தோழர். இவர்கள் எல்லாம் பழைய தோழர்கள். அவர்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை. மிகத் தீவிரமாக, தங்களுடைய வாழ்க்கையை இழந்து வேலை செய்த தோழர்கள் இவர்கள். அப்படி நிறைய தோழர்கள் இருந்தார்கள். தங்கராஜா தோழர். தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். நீண்ட காலமாக இருந்தவர். இவர்கள் யாரையுமே இவர்கள் தெரிவு செய்யல்ல.

அத்தோடு பெண்கள் பிரதிநித்துவம் மத்திய குழுவில் மிகக்குறைவு. சரோஜினிதேவி மாத்திரமே இருந்தாங்க. ஜென்னியை எடுத்திருக்க முடியும். ஜென்னி தொடர்பாய் பிற்காலத்தில் விமர்சனம் இருக்கலாம். பிற்காலத்தில் எல்லாப் பேர்களை பற்றியும் விமர்சனம் இருக்குத்தானே. ஆனா அன்றைய நேரத்தில ஜென்னி தீவிரமான செயற்பாட்டாளர். காந்தீயத்தின் தொடக்க காலத்திலிருந்து புளொட்டிக்கு வந்தவர். ஆனா விரும்பல்ல. வவுனியா தோழர் செந்தில் என்று. மிகத்தீவிரமாக வேலை செய்தவர். யாழ்ப்பாண யுனிவசிற்றில படித்துக் கொண்டு வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் வேலை செய்தவர். இப்படி நிறைய தோழர்கள் பெயர்கள் ஞாபகம் இல்ல.

தேசம்: இந்த சென்றல் கமிட்டி உறுப்பினர்களை யார் தெரிவு செய்கின்றார்கள்?

அசோக்: கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த சந்ததியார், உமா மகேஸ்வரன், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் இவங்கதான். இது தனிநபர் அதிகாரங்களுக்கு ஊடாகத்தான் இந்த தெரிவுகள் நடந்தன.

தேசம்: ரகுமான் ஜானுக்கும் அந்த அதிகாரம் இருந்ததா?

அசோக்: ஓம் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஐந்து பேருக்கு தான் அந்த அதிகாரம் இருந்தது. இல்லாட்டி கண்ணாடி சந்திரனை எவ்வாறு கொண்டு வர முடியும்? அதிகாரம் இருந்தபடியால் தானே. இவர்கள்தான் புளொட்டின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். வழிகாட்டிகள். உமா மகேஸ்வரனின் தன்னிச்சையான போக்குகளுக்கு, அதிகார செயற்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக இருந்தவங்க இவர்கள்தான். ஆரம்பத்திலேயே நாம் நேர்மையாக ஐனநாயக மத்தியத்துவ பண்புகளோடு தன்னிச்சையான போக்கு, குழு வாதம் தனிநபர் விசுவாசம், திறமையற்ற நபர்களை உள்வாங்கல் போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டிருந்தால் உமா மகேஸ்வரனின் அதிகாரத்தையும் புளொட்டின் அழிவையும் தடுத்திருக்க முடியும்தானே. புளொட்டின் உட் கொலைகளுக்கும் அதன் சீரழிவுகளுக்கும் காரணமான உமா மகேஸ்வரனினால் பயன்படுத்தப்பட்ட அனேகர் சந்ததியாரல் கொண்டு வரப்பட்ட ஆட்கள்தானே. இவர்களை சரியான வழியில் அரசியல் சிந்தனை கொண்டவர்களாக ஏன் சந்ததியாரல் மாற்றமுடியாமல் போயிற்று?

யோசித்துப்பாருங்க.

தேசம்: அப்படிப் பார்த்தாலும் உமாமகேஸ்வரன், கண்ணன் இவர்கள் இரண்டு பேரும் வேற ஒரு அரசியலில் இருந்து வந்தவர்கள். அங்கால ரகுமான்ஜான், சந்ததியார், சலீம் மூன்று பேரும் கிட்டத்தட்ட தீப்பொறி…

அசோக்: சந்ததியாருக்கும் தீப்பொறி இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பிறகு கதைப்பம். உண்மையில் விமர்சன பூர்வமாக ஆராய்ந்தோமானால் ஆரம்பகால புளொட்டில் அதிகாரம் என்பது உமாமகேஸ்வரன் போன்றவர்களிடம் மட்டும் இருக்கல்ல. சந்ததியார், ரகுமான்ஜான், கேசவன் போன்ற தோழர்களிட மும் இருந்தது. இவர்கள் புளொட்டை இடதுசாரி அரசியல் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பாக வளர்த்தெடுத்து இருக்க முடியும். இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் தானே… ஆரம்ப காலத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உமாமகேஸ்வரன் மீதோ, கண்ணன் மீதோ விமர்சனங்கள் வைக்க முடியாது . சந்ததியார், ரகுமான்ஜான் இவர்களோடு இணைந்துதானே எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானித்துள்ளார்கள்.

உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி தன்னிச்சையான போக்கு கொண்டவர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக உருவாகக் கூடிய சூழலை சந்ததியார், ரகுமான்ஜான் இல்லாமல் செய்திருக்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் ஆளுமைகொண்ட சக்திகளை மத்தியகுழுவில் உள்வாங்கி இருக்க வேண்டும். இவர்களும் நேர்மையாக முன் மாதிரியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது கோஸ்டி சேர்த்ததுதானே. இவர்களே தவறான வழிகாட்டிகளாகத்தானே இருந்திருக்காங்க. சந்ததியார், உமாமகேஸ்வரன் முரண்பாடு வந்ததன் பிறகு தான் உமாமகேஸ்வரன் சுயரூபம் தெரியுது. இந்த மோசமான அதிகாரத்தை தனிநபர் ஆதிக்கத்தை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியதில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இதை முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது உணரமுடிந்தது. ரகுமான் ஜான் தோழர் மிகத்திறமையாவர்.அரசியல் திறனும் இராணுவத்திறனும் கொண்டவர். கேசவன் தோழர் இடதுசாரிய அரசியல் கொண்டவர். சந்ததியாரும் அரசியல் ரீதியில் வளர்ந்தவர். இவர்கள் சரியான வழிகாட்டிகளாக இருந்திருந்தால் பின் தளத்தில் புளொட்டை இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்திருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இவங்களுக்கு நிறைய இருந்தது.

தேசம்: இந்த மத்திய குழு கட்டுப்பாட்டு குழு தொடர்பாக நீங்கள் முதல் தரம் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது…

அசோக்: இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது. 84 ஜனவரி கேகே நகரில் தான் மீட்டிங் நடக்குது. எனக்கும் ஒரு கற்பனை தானே மீட்டிங் தொடர்பாக. இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எல்லாம் படிச்சுப் போட்டு, இது தொடர்பான கற்பனையோடு, மத்திய குழுக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும், அரசியல் சித்தாந்த விவாதங்கள் நடக்கும் என்று சொல்லி அங்க போனால்…

முதலாவது சென்றல் கமிட்டி மீட்டிங்கில விவாதங்கள் எல்லாம் சம்பவங்களாத்தான் இருந்திச்சு. அதுக்குப் பிறகு நடந்த சென்றல் கமிட்டீ மீட்டிங்கில இந்தியா கொடுத்த ட்ரெய்னிங் தொடர்பாக பேசப்பட்டது. எல்லா இயக்கங்களுக்கும் ட்ரெய்னிங் கொடுக்க இந்தியா முடிவு பண்ணியிருந்த நேரம். புளொட்டுக்கு கொடுக்கபடவில்லை. அப்ப புளொட் ரெயினிங் எடுக்கப்போவதா இல்லையா என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அது அரசியல் கருத்தியல் நடைமுறை சார்ந்த பிரச்சனை தானே.

தேசம்: ஓ.

அசோக்: ஆனால் அந்த விவாதம் கருத்தியல் சார்ந்து பெருசா நடக்கேல. கருத்தியல் சார்ந்து இந்தியா தரும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள் இதில் எதிர்கால சிக்கல்கள் எதைப்பற்றியும் உரையாட வில்லை. அவர்களை என்னென்று கையாளுவது என்பது பற்றி எதுவுமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான ஆட்கள் கட்டாயம் ட்ரெய்னிங் எடுக்கனும் என்ற நிலைப்பாட்டில்தான் கதைத்தாங்க. ரெயினிங் எடுப்பது பிரச்சனை அல்ல. குறைந்தபட்சம் இதை அரசியல் உரையாடலாக கொண்டு போய் இருக்கமுடியும். இவர்கள் யாருமே தயாராக இல்லை. டெலோவும் எடுக்குது. புலிகளும் எடுக்குது. ஈபிஆர்எல்எஃப்பும் எடுக்குது. நாங்களும் எடுக்கப் போவம் என்டு தான் ஒரு முடிவுக்கு வாராங்க. அதுல வார நன்மை தீமை – அதனால வாற பிரச்சனை இது பற்றி யாரும் ஆராயத் தயாராக இல்லை.

தேசம்: இந்த வங்கம் தந்த பாடம் எந்தகால கட்டத்தில வெளியிடப்பட்டது…?

அசோக்: வங்கம் தந்த பாடம் எண்பத்தி மூன்று காலகட்டத்தில் வெளியானது.

தேசம்: அப்படி என்டா நீங்க போன கூட்டத்திற்கு முன்பாகவே அது வெளியிடப்பட்டுட்டு விட்டது?

அசோக்: அதுக்கும் மத்திய குழுவுக்கும் தொடர்பில்லை. அது இலங்கையில் வெளியிடப்பட்டது. அது மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு அது வெளியிடப்பட்டது. நாங்க மாவட்ட அமைப்பாளர்கள் இருந்தம்தானே அந்த காலத்திலேயே அடிக்கப்பட் டது…

தேசம்: அதாவது இதை வெளியிட்ட அவர்களுக்கு ஒரு கருத்தியல் இருக்குதானே…?

அசோக்: ஓ நிச்சயமாக.

தேசம்: அப்ப இந்தியா தொடர்பான அரசியல் மற்ற ஆபத்துகள் பற்றி விவாதிக்கப்படலையா..?

அசோக்: தமிழ் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் எங்களிடம் சரியான அரசியல் பார்வை இருந்தது. அதன்ற வெளிப்பாடுதான் வங்கம் தந்த பாடம். எங்களிடம் இருந்த தெளிவு மத்திய குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. மத்தியகுழு எப்படி உருவாக்கட்டது என்று முன்னமே கதைத்திருக்கிறம். புளொட்டில் ஆரம்ப காலங்களில் இருந்த லும்பன்களும், கடடுப்பாட்டுக்குழுவில் இருந்த உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான்ஜான் விசுவாசிகளும்தானே மத்தியகுழுக்கு தெரிவு செய்யப்பட்டவங்க. அரசியல் கோட்பாட்டு நடைமுறை கொண்ட நேர்மையான தோழர்கள், எந்த முடிவெடுக்கும் அதிகாரமற்றவர்களாக வெளியில்தானே இருந்தாங்க.

மாவட்ட அமைப்புகளில் ஏனைய பொறுப்புக்களில் ஈழத்தில் இருந்த தோழர்கள் கருத்தியல் சார்ந்து வளர்ந்தவர்கள். இந்த மாவட்ட அமைப்பாளர்கள் எல்லாரும் மத்திய குழுவுக்கு போ கவில்லைத்தானே. மத்திய குழுவில் சிறை உடைப்பிலிருந்து வெளியே வந்தாக்கள்தான் அதிகம் பேர்.

தேசம்: இதில மாவட்ட பிரதிநிதிகளோ – மாவட்ட அமைப்பாளர்களோ இந்த மத்திய குழு அமைப்பில இருக்கல…? ஒராள் ரெண்டு பேர் இருந்திருக்கலாம்…?

அசோக்: முரளி, ஈஸ்வரன், குமரன் நான் எல்லாம் இருந்தனாங்க. எங்களை விட வளர்ந்த வேறு தோழர்கள் இருந்தார்கள். அவர்களையும் உள்வாங்கி இருந்திருக்கலாம்.

தேசம்: இந்தியாட்ட பயிற்சி பெறுவதா…? இல்லையா …? என்ற விவாதம் வங்கம் தந்த பாடம் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு கருத்தியல் ரீதியான விவாதமா அங்க நடைபெறல..?

அசோக்: இது ஒரு நல்ல கேள்வி. வங்கம் தந்த பாடம் இந்தியாவுக்கு, அதனுடைய செயற்பாடுகளுக்கு எதிரான புத்தகம். வங்களாதேசில் இந்தியாவினுடைய வருகையும், அதனுடைய ஆக்கிரமிப்பு பற்றிய அது தொடர்பான ஒரு புத்தகம். வங்கம் தந்த பாடம் புத்தகத்தை நாங்க படிச்சிருப்பம் தானே. எனவே இது தொடர்பான பார்வையும், இந்தியா தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தானே வேணும். அது எங்கேயும் வரலை. அப்படிப் பார்த்தால் புளோட்டா இந்த புத்தகம் அடிச்சது என்ற ஒரு கேள்வி தான் வரும் உங்க கிட்ட. அதுக்குப் பிறகு நான் கலந்து கொண்ட மத்திய குழுக் கூட்டம் எதுலயும் இந்த இந்திய ஆபத்து தொடர்பா பெருசா பேசப்படல. இந்த வங்கம் தந்த பாடம் எங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கணும். அது எப்பவுமே நடக்கல.

தேசம்: அந்த வங்கம் தந்த பாடத்தை யார் வெளியிட்டது. ?

அசோக்: 83ல் வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். தோழர் சந்ததியார், ரகுமான் ஜான், கேசவன் முக்கியமானவர்கள். இது மொழிபெயர்ப்பு புத்தகம். பங்களாதேஷ் இராணுவத்தில் இருந்த அபுதாகிர் என்கிற இராணுவத் தளபதி வெளியேறி J.S.D. என்ற கட்சி உருவாக்கினாங்க… மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி இது. அபுதாகிர் பங்களாதேசில் இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சதியையும் அம்பலபடுத்தினார். அமெரிக்க C.I.A யும், இந்தியாவும் சேர்ந்து அவரை தூக்கில போட்டுவிட்டது. அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவின் தமிழாக்ககம்தான் இது.

தேசம்: இது வெளியிடப்பட்டது உமா மகேஸ்வரனுக்கு தெரியுமா..?

அசோக்: தெரியும். தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் இது அச்சிடப்பட்டது.

தெரியாமல் செய்திருந்தால், பிரச்சனை வார காலத்தில் அது ஒரு பெரிய குற்றச்சாட்டா எங்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் தானே. அப்ப அது எங்கேயும் யாருக்கும் எதிராக வைக்கப்படல. ஆனா சந்ததியார் தொடர்பாக இந்தியா ரோவிடம் சந்ததியார்தான் இதனை வெளியிட்டவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக அறிந்தேன். எங்களுக்கு எதிராக குறிப்பாக எனக்கு, தங்கராஜா தோழர், சண்முகலிங்கம் போன்றவர்களுக்கு எதிராக நாங்க JVP யில் இருந்து போனபடியால், சீனாச்சார்பானவர்கள் என்றகுற்றச்சாட்டு ரோவிடம் சொல்லப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *