“சிங்கள மக்களே இன்றைய ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை.” முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். அதற்கு நாங்கள் கூறும் பதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே “உங்களது ஆட்சி போதும் வீட்டுக்குப் செல்லுங்கள்” என்று கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது.
எனவே சிங்கள மக்களே இன்றைய ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை என்றார். இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது,கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.
இரு தமிழர் தரப்புகளும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவை நியமித்தார்களோ தெரியாது. எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள். யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு உள்ள தடையை அகற்ற வேண்டும்.
இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவது பிரச்சினைக்குரிய விடயம். இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகின்றேன் என்றார்.