தென் ஆப்பிரிக்காவின் பீட்டர்மாரிஸ்பர்க் நகரில், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழர்களும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பேரணி நடத்தினர்.
தமிழ் மக்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கோரியும், கட்டுண்டு கிடக்கும் அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்துமாறும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியை நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு, அருட்பா கழகம், தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஏற்பாடு செய்திருந்தன.
பீட்டர்மாரிஸ்பர்க் நகரின் முக்கியச் சாலை வழியாக சென்ற பேரணி, சுதந்திர சதுக்கத்தில் முடிவடைந்தது. அங்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கையில், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிராகவும், தமிழ் மக்கள் படுகொலைக்கு இந்தியா துணை போவதாகவும், அனைத்துலகம் பாராமுகமாக இருப்பதாகவும் முழக்கமிட்டனர்.