இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. முக்கியமாக பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து என பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையானது பலருடைய அதிருப்திக்கும் காரணமாகியுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் தம்முடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விநோத போராட்டத்தை நடத்தியுள்ளார்.
கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றை அணிந்தும் உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்துகொண்டிருந்தார். விலை அதிகரிப்பானது மக்களைப் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளது என்று அரசாங்கத்தை கடுமையாக அவர் விமர்சித்தார். இதன் போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.