வன்னியில் மோதல் பகுதிகளிலுள்ள 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்களின் பாதுகாப்புக்கு ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் உத்தரவாதப்படுத்த வேண்டும் மெனவும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களின் முகாமைத்துவத்தை ஐ.நா.வே பொறுப்பேற்க வேண்டுமெனவும் வருகைதந்துள்ள ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
ஜோன்ஹோம்ஸை கொழும்பு சிமைன்கிரான்ட் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா , சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது கூட்டமைப்பு எம்.பி. க்கள் கூறியதே கவனமாக செவிமடுத்த ஹோம்ஸ் அரச தரப்பினருடனான சந்திப்பின்போது வன்னி மக்களின் மனிதாபிமான அவலம் குறித்து சில உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவை தொடர்பாக அவர்கள் காட்டும் ஈடுபாட்டை பொறுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சோனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.