விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பே தமது கரிசனைக்குரிய விடயம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜோன் ஹோம்ஸ் நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வவுனியாவுக்கு நேற்று முன்தினம் சென்று இடம்பெயர்ந்த மக்களை ஹோம்ஸ் பார்வையிட்டிருந்தார். இச்சந்திப்பின்போது புலிகள் கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் விமானத்தாக்குதல் நடத்தியது பற்றி குறிப்பிட்டபோது, இத்தாக்குதலில் பலியாகியவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக தனது அனுதாபத்தை ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.
புலிகள் பொதுமக்களை பயன்படுத்துவதற்கு இது சான்று என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் ஹோம்ஸிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.அத்துடன் இது தொடர்பாக புலிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இவர்கள் எனது மக்கள், எனது நாட்டின் பிரஜைகள், அவர்களின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து சரியாகக் கூற முடியாது. பொதுமக்கள், சிறுவர்களை ஆயுதங்கள் வைத்திருக்க புலிகள் பயன்படுத்துவது அறிந்த விடயம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் இந்தப் பொதுமக்களை பாதுகாப்பாக கொண்டுவர முடியும். இது தொடர்பாக நாம் திரும்பத்திரும்ப அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வின் சாத்தியப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டபோது, சகல மக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வில் ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் தேவை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பார்த்திபன்
கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி வன்னியில் புலிகளின் பிடியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு அமெரிக்க இராணுவம் உதவி புரியப் போவதாக கூறியுள்ளது. மொத்தத்தில் உலகமே புலிகளுக்கு ஆப்பு வைப்பதிலேயே குறியாகவுள்ளது. ஆனால் இந்த நிலை ஏன் வந்தது என்பதை புலிகளோ, புலிகளுக்கு வால் பிடிப்பவர்களோ என்றைக்கும் சிந்திக்கப் போவதில்லை.