‘என் எண்ண ஓட்டத்தில்…’ நூல் வெளியீடும்! ‘சிவஜோதி நினைவுப் பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்) – அறிவிப்பும்!

‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற தலைப்பில் அமரர் சிவஜோதி வயீத்தீஸ்வரனின் ஆக்கங்களின் தொகுப்பு வருகின்ற 18ம் திகதியன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றி குறுகிய காலத்தில் அம்மண்ணின் மைந்தனான சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தையொட்டி இந்நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதியின் பிறந்த தினமான நவம்பர் 18 இலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி எழுதிய கட்டுரைகள், மேற்கொண்ட நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. தேசம் வெளியீடாக வரும் இந்நூலை திருமதி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்துள்ளார். நாடகக் கலை, நாடகக் கலைஞர்களுடனான நேர்காணல், பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய கல்வியியலாளர்களின் நேர்காணல்கள் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் தாங்கி இந்நூல் வெளிவருகின்றது.

சிவஜோதியை ஆண்டுதோறும் நினைவு கூருகின்ற வகையில் சிவஜோதி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் சிவஜோதி ஒரு நாடகக் கலைஞர் என்பதாலும்; நாடகக் கலையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்ததாலும் நாடகக் கலைக்காக தங்களை அர்ப்பணித்த ஒரு கலைஞருக்கு அல்லது நாடகக் கலைக்கு சேவையாற்றுகின்ற அமைப்பு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சன்மானத்தை பெறுகின்றவருக்கு அல்லது அமைப்புக்கு அந்நிகழ்வில் ஹம்சகௌரி சிவஜோதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவார்.

இந்நிகழ்வில் சிவஜோதி நினைவாக லிற்றில் எய்ட் இல் கற்கும் மாணவ மாணவியருக்கு யாழ் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய பாடசாலை சீருடைகளை வழங்க உள்ளனர். சிவஜோதி யாழ் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதியின் நினைவு நிகழ்வுகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும், நாடகக் கலைக்கு உழைக்கின்றவர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சிவஜோதி நினைவுப்பரிசை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்து உள்ளது. அதற்காக சிவஜோதி ஞாபகார்த்த நிதியம் ஒன்று லிற்றில் எய்ட் இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதி நேசித்த நாடகக் கலைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன்வருபவர்கள் இந்நிதியத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.

சிவஜோதி ஞர்பகார்த்த நிதியத்துக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்கள் நிதியை வழங்க முடியும்.
வங்கி: HNB
கணக்கின் பெயர்: Little Aid Skill Development Centre (Gurantee) Limited
வங்கிக் கணக்கு இலக்கம்: 146020176746

இவ்வாண்டுக்கான சிவஜோதி நினைவுப் பரிசைப் பெறும் நாடகக் கலைஞர் அல்லது நாடக்குழு நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவஜோதி ஞாபகார்த்த குழு அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வை சிவஜோதி முன்நிலை உறுப்பினராக இருந்து இயக்கிய மக்கள் சிந்தனைக் கழகம் மற்றும் லிற்றில் எய்ட் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

– சிவஜோதி ஞாபகார்த்த குழு –

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *