ஜப்பான் இளவரசி மகோவும் சாமானிய பிரஜையான கெய் கொமுருவும் இன்று (26) திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி இன்று (26) முற்பகல் 10 மணியளவில் குறித்த இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2012 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் மகோ கல்வி பயின்றபோது அவருக்கு கெய் கொமுரு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துக்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு பல எதிர்ப்புகள் காணப்பட்டன.
ஜப்பானிய வழக்கத்தின் படி, அரச குடும்பத்தில் உள்ளவர்கள் சாதாரண பிரஜையொருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், ஜப்பானிய இளவரிசியான மகோ தமது காதலருக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்திருந்தார்.
அத்துடன், அரச குடும்பத்தினால் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்தையும் அவர் நிராகரித்துள்ளதுடன், அவர்களின் திருமண நிகழ்வும் மிகவும் எளிமையாக இடம்பெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின்னர், மகோ மற்றும் அவரது கணவர் ஆகியோர் அமெரிக்காவில் குடியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.