தென்னாபிரிக்க அணியினர் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு ஆதரவு – பிரபல வீரர் டி காக் விலகியதற்கான காரணம் என்ன ..?

இனவெறிக்கு எதிராக இனி ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் தென் ஆப்பிரிக்க அணியினர் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் காவலர் டெரிக் செவின், அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் ஏதோ திருடிவிட்டார் எனக் கருதி அவரின் கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து கொலை செய்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பலைகளை உருவாக்கியது, கண்டனத்தை எழுப்பியது. இனவெறிக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலை இந்தச் சம்பவம் உருவாக்கிவிட்டதாகக் கருத்துகள் பரவின.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு, கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென் ஆப்பிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் லாசன் நைடோ வெளியிட்ட அறிக்கையில், “இனவெறியை அனைவரும் கடந்து வருவதற்கு ஒற்றுமையாக இருந்து, பிணைப்புடன் இருந்து நமக்குள் வலிமையை ஏற்படுத்த வேண்டும். இனவெறி நம்முடைய பலவீனத்தைப் பயன்படுத்தி விடக்கூடாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இனவெறி என்று வரும்போது அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.

எங்களின் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டூடுவின் 90-வது பிறந்த நாளில் உலகெங்கும் இருக்கும் தென் ஆப்பிரிக்க மக்கள் பங்கேற்றனர். தென் ஆப்பிரிக்காவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவருக்கு சிறந்த அஞ்சலியாக இருந்தது. ஒன்றுபட்ட தென் ஆப்பிரிக்காவுக்காகப் பணியாற்றுகிறோம் என்பதையும் உணர்த்தியது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில்  வென்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு தேர்வு செய்தது. சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தெ.ஆ. அணி தலைவர் பவுமா தெரிவித்தார். இது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேலும் .ஆ. கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையால் அதிருப்தி அடைந்து, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் இந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி காக்கை பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். எனினும் இதுகுறித்த தன் நிலைப்பாட்டை டி காக் விரைவில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *