ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி.சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.