தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் உருவாக்கம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோட்டாபாய ராஜபக்சவினால் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலணியின் உருவாக்கத்திற்கு எதிர்கட்சிகள், மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
வட மாகாணத் தமிழ் மக்களுக்கு என தேசவழமை சட்டம் டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலில் ‘ஒரு நாடு ஒரு சட்டமானது தற்போது வலுவில் இருக்கும் றோம டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாகக் கணித்து ஒற்றைச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு மாகாணத்தில் இருக்கும் அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவது அல்லது தொடர்ந்து வைத்திருப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல எனவும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.