‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியை நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் அறிவிப்பு !

“இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும் எனவும் அதனை வலியுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்கிழமை (2) யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, பின்வரும் தீர்மானங்களை அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம் என ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்.

அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நாம் நிராகரிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு இருவாரங்களுக்குள் நடாத்தப்படும் என்றும் பிரஸ்தாப தீர்மானங்களின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானங்களை தமிழீழ விடுதலை இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டணி என்பன கூட்டாக வெளியிட்டுள்ளன.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *