“இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் திட்டம் ஆரம்பம்.” – தொடக்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

“இலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர்.” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 106 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக முதல் கட்டமாக ரூ. 142.16 கோடி மதிப்பில் 3 ஆயிரத்து 510 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதைத் தவிர, முகாம்களில் ரூ.30 கோடியில் அடிப்படை வசதிகள், ரூ.12.41 கோடியில் உயா்த்தப்பட்ட பணக் கொடை, ரூ.4.52 கோடியில் கைத்தறித் துணிகள் என ரூ.225.86 கோடி மதிப்பிலான 12 வகையான நலத்திட்ட உதவிகள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில், வேலூா் மேல்மொணவூா் முகாமில் உள்ள 220 குடும்பங்களுக்கு ரூ. 8.91 கோடி மதிப்பில் புதிய வீடுகள் உட்பட ரூ.10.03 கோடி மதிப்பில் 11 நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடக்கிவைத்தாா்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“இலங்கைத் தமிழா்கள் என்பது ஒரு அடையாள சொல். மற்றபடி தமிழா்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். இலங்கைத் தமிழா்கள் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவா்கள்.

இலங்கையில் தமிழா்கள் பாதிக்கப்பட்ட காலம் முதலே அவா்களுக்காக குரல் கொடுத்துவரும் இயக்கம் திமுக. 1983ஆம் ஆண்டில் அவா்கள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனா். இந்த முகாம்கள் மோசமாக இருந்த நிலையில் ஏராளமான திட்டங்களை 1997இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி செயற்படுத்தியதால் தன்னிறைவு அடைந்தனா்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் இலங்கைத் தமிழா்களுக்காக எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு மீண்டும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அகதிகள் முகாம்கள் என்பதை மாற்றி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அறிவிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழா்களின் நலன் காக்க தி.மு.க.வும் தி.மு.க அரசும் எப்போதும் துணை நிற்கும். அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்லர். என்னை இலங்கை தமிழா்கள் உடன்பிறப்பாக நினைத்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *