பிரிட்டனில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் வந்து குடியேறுபவர்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. வேலை வாய்ப்புகளில் உள் நாட்டவர்களுக்கு முதலிடம் வழங்கும் பொருட்டே தொழில்சார் நிமிர்த்தமான குடியேற்றத்துக்கான இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படவிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேறுதல் முறையின் முதலாவது வரிசைப் படுத்தல் பகுதியின் கீழ் பிரிட்டனில் குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் உயர்த்தப்படவிருக்கின்றன.
இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் தற்போது நடைமுறையிலிருக்கும் தகைமை மற்றும் குறைந்தப்பட்ச சம்பள மட்டங்களாக இருந்த பட்டதாரி கல்வி கற்பவர் மற்றும் 17 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் புதிய விதிமுறைகளின் பிரகாரம் முழுநிலை பட்டதாரி மற்றும் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸாக உயர்த்தப்படவிருக்கிறது.
பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜெக்கியூ ஸ்மித் வெகு விரைவில் இந்த புதிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார். அடுத்த வருடம் முதல் அனைத்து மட்டங்களிலுமான குடியேற்றங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கத்திலான திட்டத்தின் கீழேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரிட்டனுக்கு வேலைக்கு வருபவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டியது முக்கியமென நாம் எப்போதுமே கூறி வந்திருக்கிறோம். ஐரோப்பாவிற்கு வெளியிலிருந்து தகைமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று பிரிட்டன் வருவதை நாம் ஏற்கனவே நிறுத்தியிருந்தோம். எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார வீழ்ச்சி பிரிட்டன் தொழிலாளர்களை பாதிப்பதால், நாம் எமது தெரிவு நடவடிக்கையை எப்படி மேலும் இறுக்கப்படுத்துவது என்பது பற்றி செயற்பட்டு வருகிறோம்’ என்று பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஸ்மித் சண்டே ரெலிகிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.