கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில் மூன்று நாள்கள் சேவையில் ஈடுபடவேண்டும்.
கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தக் கிராமத்துக்கு கடமைக்கு அமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுப்பார்கள்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து வருகை தந்த மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முயற்சி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது