“தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடாமல் உடனடியாக வெளியேறுங்கள். எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
கேகாலையில் நேற்று நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சஜித் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“தவறிழைத்துவிட்டோம், அன்று சித்திரம் வரைந்த இளைஞர்கள் இன்று நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என இன்று சிலர் கவலை வெளியிடுகின்றனர். இவ்வளவு நாள் நித்திரையிலா இருந்தார்கள்?
வடக்கையும், தெற்கையும் விற்கும்போது பங்காளிகள் அரசுக்குள்தான் இருந்தார்கள். நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அமைச்சரவைப் பத்திரம் வரும்போது அமைச்சரவையிலும் இருந்தனர். எனவே, தற்போது நாடகமாடுகின்றனர்.
தன்மானம் இருப்பில் அரசிலிருந்து வெளியேறி, நாட்டைப் பாதுகாக்க எம்முடன் இணைந்து போராடுமாறு சவால் விடுக்கின்றேன்” என்றார்.