விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இந்தியா உதவியளிக்குமாயின் அம்மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதற்கும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு உதவியளிக்கத் தயாரென இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பி.பி.சி. செய்திச் சேவைக்கு வெளியிடும் போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவர் இதன் போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) மற்றும் ஐ.நா. முகவரமைப்புகளின் உதவியுடன் இந்தியா அவ்வாறு செயற்பட முன்வருமாயின் அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம். நிச்சயமாக அதற்கு எமது ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவே இருப்போம். ஆனால், இலங்கை அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, மக்கள் தங்களது கிராமங்களிலிருந்து வெளியேறி வந்து வேறு இடங்களில் நீண்ட காலத்துக்கு வாழ முடியாது. மிகவும் குறைந்த காலப்பகுதிக்குள் மக்கள் மீண்டும் அவர்களது கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.
பாதுகாப்பை காரணம் காட்டி தமிழ் மக்கள் சரித்தர ரீதியாக வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து அம் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை வேறு இடங்களில் வாழவைக்க இந்த அரசாங்கத்துக்கு இருக்கும் நோக்கத்தை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு போனால் அரசாங்கம் தங்களை மீண்டும் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியமர்வதற்கு இடமளிக்காது என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே, மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சந்தேகமே அவர்கள் வெளியேறி வருவதில் முக்கியமான தடையாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே, இந்தியா இவ்விதமான முயற்சியில் ஈடுபட்டால் இம் மக்களை முழுமையாக அவர்களது சொந்த வதிவிடங்களில், கிராமங்களில் மீள குடியேற்றுவதற்கும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்