மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் ட்வெயின் பிராவோ தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.
அவர் இதுவரை நடந்த ஏழு 20 உலக கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார். இதில் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
38 வயதான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டி, 164 ஒருநாள் போட்டி, 90 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஓய்வு முடிவு குறித்து பிராவோ கூறியதாவது:-
ஓய்வு பெற நேரம் வந்து விட்டது என நான் நினைக்கிறேன். நான் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை பெற்றுள்ளேன். 18 ஆண்டுகளாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறேன்.
இதில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் கரீபியன் மக்களையும், அந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தியதில் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது