தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ள போதும் அதற்குரிய திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும் இந்த விஜயத்தின்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காக கொண்டு நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.