8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈட்டை கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம் கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டு கோரிக்கைக் கடிதத்தில் QingdaoSeawin நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,
விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மீறும் வகையில், சோதனை அறிக்கைகளை வௌியிடும் தரப்பிற்கும் பரிசோதனை அறிக்கைளை உண்மைக்கு புறம்பான விதத்தில் பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உள்ளது தெரிவித்துள்ளது.
இலங்கையானது, உடன்படிக்கைகளுக்கு கௌரமளிக்காமை மற்றும் அங்குள்ள மக்களை தவறாக வழி நடாத்திச் செல்கின்ற விடயம் தொடர்பில் தம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. சீனாவின் நிறுவனமொன்று இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றுமதி செய்ததாக கூறப்படும் பொய்யான அறிக்கை, அது தொடர்பில் உண்மை தெரியாத பலரையும் நுகர்வோரையும் தவறான திசைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகத்திற்கு பாரிய இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்திற்கு அமைய, குறித்த உற்பத்தியில் Erwinia பக்டீரியா காணப்படுவதாக தெரிவிக்கப்படும் அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை. 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 20 நிமிடங்களுக்கு கிருமி நீக்கம் செய்யப்படும் இந்த சேதன பசளையில், ஒருபோதும் Erwinia பக்டீரியா இருக்க முடியாது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.