ஐக்கிய மக்கள் சக்தியை மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மீரிகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியதாவது:-
தற்போதைய அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் மாற்று அரசியல் சக்தியாக, ஐக்கிய மக்கள் சக்தியை இன்னும் கருதத் தொடங்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த 50 வீதமானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் .
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட கட்சியின் பல உறுப்பினர்கள் மீது எவ்வித ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களும் கிடையாது. ஊழல், மோசடிகளைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசைச் சேர்ந்தவர்களில் சிலரே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் – என்றார்.