“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.
சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின் அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.
தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.
கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.