“ஒரு குற்றவாளியை ஜனாதிபதி செயலணியின் தலைவராக்கியுள்ளார்கள்.” – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவலை !

“இனங்களுக்கு இடையேயான இன ஒற்றுமையை ஒழிக்கவா “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி..? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை பாதுகாப்புக்கு தொடர்பில்லாமல் நூற்றாண்டு காலமாக சில சமூகங்கள் பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை மாற்றவேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி செயலணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

தனியார் சட்டங்களுக்கும் பாதுகாப்புக்கும் எந்த அடிப்படையில் தொடர்பிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். இன ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தி சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற நிலையை இந்த செயலணி ஏற்படுத்திவிடுமா என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செயலணிக்குழுவுக்கு தலைமை தாங்கும் மதகுருவான கலகட அத்தே ஞானசார இந்த நாட்டின் பல நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை கையிலெடுத்ததனால் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர். அப்படிப்பட்டவர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த செயலணி மீது நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.

இது சம்பந்தமாக நீதியமைச்சரே தனக்கு தெரியாமல் நடந்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் அதிருப்தியுற்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நியமன விடயம் தொடர்பில் எமது நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் எங்களை இந்த செயலணியின் செயற்பாடுகளினால் அமைதியின்மையும், பிளவையும் உண்டாக்கிவிடுமா எனும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையன் என்ற ரீதியில் செயலணி சகல விடயங்களுக்கும் ஆப்பாக அமைந்துவிடும் எனும் கவலை என்னுள் உருவாகியுள்ளது. இந்த நாட்டில் நிம்மதியான, ஒற்றுமையான, நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசிலுள்ள சில தலைவர்கள் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாங்கள் வேண்டிக்கொள்வது “ஒரே நாடு ஒரே சட்ட செயலணி”யை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் பொருளாதார உயர்வுக்கான திட்டங்களை வகுத்து மக்களின் வாழ்வுக்கு உதவும் நல்ல திட்டங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *