பாகம் 15: இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 15 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 15

தேசம் : கண்ணாடிச் சந்திரன், நேசன் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் கொலைகள் நடந்தனவா?

அசோக்: ஓம். பல விடயங்கள் மர்மமானவை. ஒரு சிலதான் எங்களுக்கு தெரியவந்தன.

கொட்டடிப் பகுதியில், இவர்கள் ஒரு கொலை செய்தார்கள். அந்தப் பகுதியில் சண்டித்தனம் செய்கிறார் என்று சொல்லி, ஒருவரை எச்சரிக்கை பண்ணுதற்காக, கண்ணாடிச் சந்திரனும், நேசனும் போய் இருக்காங்க. அவர் அந் நேரத்தில் கண்ணாடிச் சந்திரனை அடித்து விட்டார். அந்தக் கோபத்தில் அவரை, பிறகு கொலை செய்துவிட்டாங்கள். புளாட் என்று யாருக்கும் தெரியாது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் இராணுவப் பொறுப்பாளராக வந்த பிறகு, நீங்கள் ஒரு மூன்று நாலு படுகொலைகள் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிடவும் சம்பவங்கள் நடந்ததா?

அசோக்: நிறைய கொள்ளைகள் நடந்திருக்கு. உதாரணமாக யாழ்ப்பாண டவுனில் ஒரு பாட்டா சப்பாத்து கம்பெனி இருந்தது. அவர்கள் நிறைய எங்களுக்கு ஹெல்ப் பண்ணினார்கள். டெசோவுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினார்கள். அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. அதுவும் புளொட் என்று தெரியாது.

தேசம்: அரசியல் பிரிவுக்கும் ராணுவ பிரிவுக்கும் தொடர்பில்லாத செயற்பாடுகளால் நடந்ததா அல்லது?

அசோக்: அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் எந்த தொடர்பும் இருக்கல்ல. குறிப்பாக தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் இததெல்லாம் தேவையற்றது, இராணுவப் பிரிவு ஒன்று இருந்தாலே போதும் என்ற சுத்த இராணுவ வாதக் கண்ணோட்டம்தான் இவர்களைப் போன்ற பலரிடம் இருந்தது. மக்கள் அமைப்பின் பிரதேச பொறுப்பாளர்களாக இருந்த பலர், தங்களை இராணுவ நடவடிக்கைகளில், சாகசங்களில் ஈடுபடும் நபர்களாக காட்டடிக் கொள்ளவே ஆசைப்பட்டனர். எந்த இராணுவப் பயிற்சியும் இவர்களுக்கு இருக்கல்ல. அரசியல் அறிவும் இருக்கல்ல. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு துப்பாக்கி கொண்டு விசாரிப்பது, அடிப்பது. இதற்காகவே பிரச்சனைகளை தேடி அலையும் நபர்களாக பலர் மாறிப் போயிற்றாங்க.

ஜீவன் என்றொரு தோழர். ஆரம்பத்தில் தொழிற் சஙகத்தில் வேலை செய்தார். அது அவருக்கு போகப் போக பிடிக்கவில்லை. கிராமங்களில் இறங்கி வேலை செய்ய வேண்டும். மத்திய தர வர்க்ககுணாம்சம் இதற்கு இடம் தராது. அத்தோடு தொழிற்சங்க அமைப்புக்களில் வேலை செய்வது, மக்கள் பணி ஆற்றுவது அதிகாரத்தனங்களை வழங்காது. அப்ப மக்கள் மத்தியில் அதிகாரம் கொண்ட மனிதராக காட்ட வேண்டும் என்றால், இப்படியான அமைப்புக்களில் வேலைசெய்ய முடியாது. நேசனிடம் சொல்லி மக்கள் அமைப்பிற்கு மாறி விட்டார். துப்பாக்கியோடு சென்று விசாரனை செயயும் ஆளாக மாறி விட்டார். இதுதான் இவர்களின் விருப்பமாக இருந்தது. தங்களை சுற்றி அதிகார விம்பங்களை உருவாக்கும் இந்தச் செயல் பலரிடமும் இருந்தது.

பிறகு இவர் ஒருதடவை, தீவுப் பகுதியில் நடந்த குடும்ப பிரச்சனை ஒன்றிக்கு, துப்பாக்கியோடு இன்னொரு தோழரோடு மோட்டார் சைக்கிளில் போய் இருக்கார். போகும் போது, ஆமியைக் கண்டு விட்டார்கள். இவர், பயத்தில் துப்பாக்கியை பண்ணைப் பாலத்தினுள் எறிந்து விட்டார். எங்களிடம் அப்போது இருந்ததே இரண்டு முன்று துப்பாக்கிகள்தான். இப்படித்தான் எல்லாம். இப்போது கனடாவில் பிரபல ரியல் ஸ்டேட் புரோக்கராக இருக்கிறார் .

தேசம்: இதுல இன்னொன்று பார்த்தீர்களென்றால், நேசன் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். கண்ணாடிச் சந்திரன் இராணுவப் பொறுப்பாளராக இருக்கிறார். இவர்கள் இரண்டு பேருமே பிற்காலத்தில் தீப்பொறியில் வேலை செய்திருக்கினம். ஏன் இவர்கள் மற்றவர்களோடு இவை பற்றி உரையாடுவதில்லை.

அசோக்: நான் முதலே சொன்னேன் தானே. ஒரு ஜனநாயக பூர்வமான உரையாடல் தளம், அதற்கான மன நிலை, அரசியல் கல்வி எப்போதும் அவர்களிடம் இருந்ததில்லை. அத்தோடு, அரசியல் வளர்ச்சியற்ற சாகச மனநிலை கொண்ட நபர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். உண்மையில் இவர்கள் லும்பத்தனம் கொண்டவர்கள்.

தேசம்: இதுல அரசியல் வார்த்தைகளை விடுங்கள். இது ஒரு சாதாரண மனிதாபிமானம் சம்பந்தமான விடயங்கள் தானே? ஒருவரை கொலை செய்வது அல்லது ஒருவரை துன்புறுத்துவது என்பது அதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு போன போராளிகள் செய்வது என்பது எந்த ஒரு வகையில்?

அசோக்: ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பார்த்தீர்களென்றால் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கொலைகளில், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சாகச நிகழ்ச்சியாக, அதிகார மேலாண்மையை நிறுவும் எத்தனங்களாக போய்விட்டது. ரெலோ செய்யும், டைகர் செய்யும். இயக்கங்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, இவங்களுக்கும் தேவைப்படுது. ஏனென்றால், வேறு வேலைத்திட்டங்கள் இவங்களுக்கு இல்லை. நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வோம், தொழிற்சங்கங்கள் வேலை செய்யும், மாணவர் அமைப்புகள் வேலை செய்யும், மக்கள் அமைப்பு வேலை செய்யும். இப்படி பல்வேறு வேலைத் திட்டங்கள் எங்களிடம் இருந்தது. இராணுவப் பிரிவுக்கு ஒரு வேலையும் இல்லை. ராணுவப் பிரிவில் ஈடுபட்ட இவர்கள் யாருமே இராணுவப் பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லை. கண்ணாடிச் சந்திரனுக்கும், மல்லாவிச்சந்திரனுக்கும் எந்த வித இராணுவக் கல்வியும், பயிற்சியும், அரசியலும் அற்றவர்கள். கொலை என்பதுதானே எங்கள் போராட்டமாக இருந்தது. இயக்கங்கள் செய்த கொலைகளை எப்படி செய்தார்கள் என்பதை அறிந்தால், எங்கட மனநிலை பாதிக்க பட்டுவிடும். அவ்வளவு கொடுரமானவர்கள் போராளிகள் என்று சொல்லிக் கொண்ட நாங்கள்…

தேசம்: மற்ற இயக்கங்கள் குறைந்தபட்சம் பொலீஸ் அல்லது ராணுவம் என்ற பொது எதிரிக்காக செய்யேக்க நீங்கள் சொந்த மக்களுக்கு எதிராக செயற்பட்டா? தோழர் கேசவனின் நிலை என்ன?

அசோக்: தோழர் கேசவன் நல்ல தோழர், ஆனால் அவர் சுயமாக செயற்படக்கூடிய ஆள் இல்லை…

தேசம்: அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்?

அசோக்: அவர்தான் தளப் பொறுப்பாளர்.

தேசம்: நேசன்…

அசோக்: யாழ்ப்பாண நேசன் மாவட்ட பொறுப்பாளர். தோழர் கேசவன் சித்தாந்த ரீதியாக வளர்ச்சி பெற்ற தோழர். யாழ்ப்பாண சூழலுக்கு நானும், கேசவனும் புது ஆட்கள். யாழ்ப்பாண புவியியல் அமைப்பு, போக்குவரத்து, ஒழிந்து வாழ்வதற்கான சூழல், களநிலை எங்களுக்கு தெரியாது. நிலம் சார்ந்த எதுவும் தெரியாது. பாதுகாப்பு சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். புது ஆட்கள் நாங்கள். இவங்க கிட்ட தான் தங்கி நிற்க வேண்டும். அப்போ முரண்பட ஏலாது இவங்களோட. தோழர் கேசவன் முழுக்க இவர்களையே தங்கி இருக்க வேண்டிய நிலையில்தான் இருந்தார். நேசனும், கண்ணடிக் சந்திரனும் அவரை தங்களிடம் தங்கியிருக்கும் ஒரு ஆளாக, அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

நான் யாழ்ப்பாணம் போய் ஒரு சில மாதங்களிலே இவர்களை தங்கி இருக்கும் நிலையை மாற்றிக் கொண்டேன். என் பாதுகாப்பு, தங்குமிடம் எவற்றுக்குமே நான் இவர்களை சார்ந்திருக்க வில்லை. அத்தோடு இவர்கள் மேல் நம்பிக்கையும் எனக்கு இருக்கல்ல. டெசோவோடையும், தொழிற்சங்கங்களோடையும் என்னை நான் இணைத்துக்கொண்டேன். அப்போ இவங்களோட நான் தங்கியிருக்க வேண்டிய அவசியம் வரவில்லை.

தொழிற்சங்கங்களையும், மாணவர் அமைப்பையும் தனித்துமான சுதந்திர அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அந்நேரத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராமிய மட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தொடர்பு எனக்கு கிடைத்தது, பெரிய உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருந்தது. இதற் கூடாகத்தான், தோழர்கள் கௌரி காந்தன், முத்து போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. பிறகு எமது தொழிற் சங்க அமைப்புக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் கௌரி காந்தனும், முத்துவும்தான்.

தேசம்: உங்களுக்கும் கேசவனுக்குமான உறவு எப்படி?

அசோக்: கேசவனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. கேசவன் தோழர் சொல்லுவார் என்ன செய்றது, பிரச்சினை என்றால் முகுந்தனிட்டையும் இவங்களை பற்றி ரிப்போர்ட் பண்ண ஏலாது. அந்த நேரம் முகுந்தனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் உறவு மிக நெருக்கமானது.

தேசம்: கண்ணாடிக்கு சந்திரன் பின் தளத்துக்கு போயிருக்கிறாரா?

அசோக்: ஓம். பின் தளத்துக்கு போயிருக்கிறார். இரண்டு மூன்று தரம் போயிட்டு வந்திருக்கிறார். முகுந்தனை சந்தித்து வருவார். வந்தவுடன் இங்கு நேசனோடு சேர்ந்து ஏதாவது குளறுபடி செய்வார். உதாரணமாக, மண்டை தீவில் உப வானொலி ஒலிபரப்பு அஞ்சல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனை கொள்ளை அடித்து, பின் தளம் அனுப்பினார். கேட்டபோது, தமிழ் ஈழத்தின் குரல் வானொலி நடத்துவதற்கு முகுந்தன் கேட்டதாக சொன்னர். இவற்றால் எந்தவித பிரயோசனமும் இருக்க வில்லை. இது பற்றி நான் முகுந்தனிடம் கேட்டபோது, தன்னிடம் இது எங்களுக்கு பிரயோசனப்படும், பவர் புள்ளானது என்று சொன்னபடியால், தேவையான கருவிகளை மாத்திரம் எடுக்கும்படி சொன்னதாக கூறினார். ஆனால், இவர்கள் முழுமையாக கொள்ளையடித்து, அதனைச் சேதப்படுத்தி விட்டு வந்துவிட்டார்கள். அதன் பின் அந்த வானெலி நிலையம் இயங்கவில்லை. அந்த சாமான்கள் எங்களுக்கும் பிரயோசனப்பட வில்லை.

தேசம்: மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்னரே போய் வந்துவிட்டாரா?

அசோக்: மத்திய குழு கூடுவதற்கு முதலே இந்தியாவுக்கு போயிட்டு வந்து இருக்கிறார். முகுந்தன் ஆட்களை எல்லாம் சந்தித்துவிட்டு வந்துட்டார். அவர்களின் நம்பிக்கைகளையும் பெற்றுவிட்டார்.

நாங்கள் தோழர் என்று கதைப்போம் அவர் பெரியய்யா என்று கதைப்பார். பெரியய்யாவுக்கு அதை அனுப்ப வேணும், பெரியய்யாவுக்கு இதை அனுப்ப வேண்டும். அன்று பெரியையாவின் ஆசைகளை நிறைவேற்றுகின்ற நபராக தான் இவர் இருந்தார். ஒரு தடவை விவசாய காரியாலத்தில் இருந்த ஜீப் ஒன்றை பின் தள உபயோகத்திற்கு என்று கடத்தி, அதை பாகங்களாக கழட்டி அனுப்பினார். இப்படி இவரின் தன்னிச்சையாக காரியங்கள் ஏராளம். வெளியில் யாருக்கும் தெரியாது. எல்லாச் செயற்பாடுகளுக்கும் துணை நேசன்தான்.

தேசம் : நீங்கள் மத்திய குழு போகும்போது இந்த இந்த தன்னிச்சையான போக்குகள் முரண்பாடுகள் சம்பந்தமா நீங்கள் பேசினீர்களா

அசோக்: நான் சந்ததியாருடன் பேசியிருக்கிறேன். இதைப்பற்றி. சென்ட்ரல் கமிட்டியில் கதைக்கல நான்.

தேசம்: தளத்தில் மத்தியகுழு உறுப்பினர்களாக உங்களோடு இருந்த மற்றவர்கள் இங்கே நடந்து கொண்டிருந்த அராஜகங்கள் படுகொலைகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கலையா?

அசோக்: சொல்லவேண்டியது கேசவன் தான். ஆனால் ஏன் சொல்லவில்லை என்றால் கேசவன் தோழருக்கு தெரியும் முகுந்தன் தோழரின் அனுசரணையுடன் தான் நடக்குது என்று சொல்லி. அப்போ முகுந்தனுக்கு எதிராக ஒன்றும் வைக்க இயலாது தானே.

தேசம்: அப்படி ஒரு முடிவுக்கு வர ஏலாது தானே? மத்திய குழு ஒன்று இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகள் பிழை என்று சொன்னால் மற்ற மத்திய குழு உறுப்பினர்கள்…

அசோக்: இதை நான் தான் கதைத்திருக்க வேண்டும். ஏனென்றால், தோழர் கேசவன் இவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார் தானே. கேசவன் அதை பெரிய பிழையாக பார்க்கவில்லை. அத்தோடு முக்கிய காரணம் இவங்களோடு அவர் முரண்பட விரும்பவில்லை.

தேசம்: ஒட்டுமொத்த இயக்கமுமே படுகொலைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுதா?

அசோக்: அப்படி சொல்லி விட முடியாது. விமர்சனங்கள் இருந்தன. ஆனால் வெளிப்படையாக யாரும் கதைக்கவில்லை. மத்தியகுழுவில், கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்தவர்கள் எவரும் இவற்றையெல்லாம் அக்காலங்களில் கண்டிக்கவில்லை என்பது உண்மைதான். கண்டித்திருந்தால், விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தால், புளாட்டின் தவறான போக்கை தடுத்திருக்கமுடியும். ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

தேசம்: மத்திய குழுவிலிருந்த எல்லாரும்?

அசோக்: யாரும் இது பற்றி கதைக்கவில்லை. குறிப்பாக தளத்தில் நடந்த படுகொலைகளை பற்றி சொல்லி இருக்க வேண்டியது நானும், கேசவனும் தான்.

தேசம்: யாரும் சொல்லி இருக்கலாம் தானே?

அசோக்: அவங்களுக்கு தெரியாது தானே.

தேசம்: ஏன் பத்திரிகைகளில் வெளியில வந்து இருக்கும் தானே?

அசோக்: பெருசா வரேல்ல. புளொட் என்றே தெரியாது. 3 கொலையும் புளொட் என்றே தெரியாது.

தேசம்: அப்போ நீங்கள் தனிப்பட்ட முறையிலேனும் ரகுமான் ஜானுடனோ, கேசவனுடனோ பேசவில்லையா இதைப்பற்றி?

அசோக்: தோழர் கேசவனுடன் இவர்களின் தன்னிச்சையான போக்குகள் படுகொலைகள பற்றி கதைத்திருக்கிறேன். தோழர் கேசவனுடன் முரண்பட்டிருக்கிறேன். தோழர் ரகுமான் ஜான் இக் காலங்களில் பாலஸ்தீன பயிற்சிக்காக சென்றுவிட்டார்.

தேசம்: மற்ற உறுப்பினர்கள்…

அசோக்: தளத்தில் இருந்த ஏனைய மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன், முரளி, குமரன் ஆட்களோடு எல்லாம் இதைப்பற்றி கதைத்து இருக்கிறேன்.

தேசம்: அது நீங்கள் தளத்தில் இருந்த ஆட்கள். நான் கேட்கிறது பின் தளத்தில் இருக்கிற ஆட்களுடன்

அசோக்: பின் தளத்தில் யாருடனும் கதைக்கேல.

தேசம்: உங்களுக்கு அச்ச உணர்வு இருந்தது அவர்கள் தொடர்பாக அல்லது..

அசோக்: அந்த கால கட்டத்தில் நான் கலந்து கொண்ட முதலாவது இரண்டாவது மத்தியகுழு கூட்டங்கள் அவை. அதனால் அங்கு இவை எதனையும் என்னால் கதைக்க முடியாது போய் விட்டது. ஆனால் தோழர் சந்ததியாரோடு இவை பற்றி கதைத்திருக்கிறேன். கட்டுப்பாட்டு குழுவில் கதைப்பதாக சொல்வார். கதைத்திருப்பாரோ தெரியல்ல. காலப்போக்கில் நிறைய சம்பவங்கள் நடந்தது. அதைப்பற்றி மத்தியகுழுவில் கதைத்திருக்கிறேன். அதைப்பற்றி பிறகு கதைக்கலாம். ஆனால் அக்காலங்களில் சென்றல் கமிட்டியில் இதைப்பற்றி நான் கதைக்கவில்லை. தோழர் கேசவன் தளப் பொறுப்பாளாராக இருந்தவர். அவர்தான் கதைக்க வேணும். ஆனால் அவர் இவை பற்றி கதைத்ததே இல்லை. இப்போது உணர்கின்றேன். நான் கதைத்திருக்க வேண்டும் என்று. திரும்பி பார்க்கையில் நிறைய தவறுகள் செய்திருக்கின்றோம். கடந்து செல்லல், மௌனமாக இருத்தல் என்பதுவும் ஒரு வகை தப்பித்தல்தான். புளாட்டின் தவறுகளுக்கு இவ்வகையில் நானும் காரணம்தான்.

தேசம்: கேசவன் அவரும் தீப்பொறிக்கு போனவர்..

அசோக்: ஓம் தீப்பொறி உருவாக்கத்தில் முக்கியமானவர்.

தேசம்: எனக்கு ஒரு கேள்வி வருது என்னென்றால் உமா மகேஸ்வரன் தவறான முடிவுகளை எடுத்தார் என்று சொல்லி தீப்பொறி ஒருகட்டத்தில் பிரிய வெளிக்கிடுது. ஆனால் தீப்பொறியில் இருந்த நபர்களே உமாமகேஸ்வரனுக்காக சில விஷயங்களை செய்திருக்கினம்.

அசோக்: ஓம் நீங்கள் புளொட்டின் வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால், எந்த காலகட்டத்தில் இந்த நபர்களுக்கும் முகுந்தனுக்கும் இடையில் முரண்பாடு வரும் காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும்.

தேசம்: எப்ப வருது அந்த முரண்பாடு.

அசோக்: அது ஒரு அதிகாரப் போட்டியில்தான் உருவாகிறது. தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக கண்ணாடிச் சந்திரன் இருக்கும் போது, பின்தளத்திலிருந்து இராணுவப் பயிற்சி பெற்ற தோழர் ரமணன் தள இராணுவ பொறுப்பாளராக பொறுப்பெடுக்கிறார். இதனை கண்ணாடிச் சந்திரன் எதிர்பார்க்கவிலலை. ரமணனோடு இராணுவ பயிற்சி பெற்ற தோழர்களும் வருகின்றார்கள். இவர்கள் தளம் வந்தவுடன் கண்ணாடிச் சந்திரனின் அதிகாரம் இல்லாமல் போய் விடுகிறது. தன்னுடைய பதவி பறிபோகேக்கத் தான் அந்த முரண்பாட்டின் தொடக்கம் வருது. எப்ப தங்களின் அதிகாரம் பறிக்கப்படுதோ அப்பதான் முரண்பாடு வருது.

தேசம்: ரமணனைப் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.

அசோக்: ரமணன் அருமையான தோழர்.

தேசம்: அவர் எந்த மாவட்டம்

அசோக்: அவர் எந்த மாவட்டம் என்று தெரியல. கடைசியா மட்டக்களப்புக்கு போய் ராணுவ சுற்றிவளைப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தேசம்: எத்தனையாம் ஆண்டு?

அசோக்: 85 ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நாலு ஐந்து தோழர்கள் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அந்த காலகட்டத்தில் பின் தளத்தில் படுகொலைகள் ஏதாவது நடந்தது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா

அசோக்: அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற சந்தர்ப்பம் இல்லை ஆரம்பகாலம் தானே அது. படுகொலைகள் எப்ப நடக்குது என்று கேட்டால் ஒரு அதிகார மையம் உருவாகின பிறகுதான். சந்தேகங்களின் அடிப்படையில் தான் உட்கட்சி கொலைகள் நடக்குது. 84 க்கு முன்னர் சில படுகொலைகள் நடந்ததென பின்னர் அறிந்திருக்கிறேன். சிவநேசன், ராஜ் மோகன் கொலைகள் என. 84 கடைசி காலங்களிலிருந்துதான் நிறைய தவறுகளும், இயக்க உள் கொலைகளும் தொடங்கி இருக்குமென நினைக்கிறேன். இக்கொலைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் பலர் இன்னும் உள்ளனர். அவர்கள் உண்மை சொல்ல வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை புளொட் ஆரோக்கியமான ஒரு அமைப்பாக தான் இருந்தது. முகுந்தனுடைய விசுவாசிகளாக தான் எல்லாரும் இருந்தார்கள். ஏனென்றால் முகுந்தன், சந்ததியாருக்கு இடையில் ஒரு ஒருங்கிணைந்த ஒருமைப்பாடு இருந்தது. கட்டுப்பாட்டுகுழுவை அவதானித்தால் இது விளங்கும்.

தேசம்: அப்போ அந்த நேரத்தில் நடந்த அத்தனை ஜனநாயக விரோத அராஜக போக்குகளையும் எல்லா ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொண்டிருக்கு.

அசோக்: நான் உட்பட, எல்லாரும் ஏற்றுக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். தளத்தில் இருந்த எங்களுக்கு, பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக தெரிந்திருக்கவில்லை. குறிப்பட்ட காலம் வரையும் சந்ததியாரோ, கேசவனோ, ரகுமான் ஜானோ எவருமோ எங்களோடு இவை பற்றி கதைக்கவில்லை. முரண்பாடு தொடங்கிய பின்தான் எங்களோடு இது பற்றி கதைக்கிறார்கள். நாங்கள் கொலைகள் தொடர்பாக விமர்சனங்கள் வைத்தாலும், கொலைகளுக்கு தவறுகளுக்கு நாங்களும் தான் பொறுப்பு. ஏனென்றால் புளொட் தானே செய்தது.

தேசம்: அந்த சந்தர்ப்பத்தில் மத்திய குழுவில் கதைக்கப்படவில்லை.

அசோக்: பின் தளத்தில் சந்ததியார், முகுந்தன் முரண்பாடுகள் தொடங்க முதல், ஆரம்ப காலங்களில் கொலைகள், தவறுகள் தொடங்கிய காலத்திலேயே கதைத்திருந்தால் இவற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். கதைக்கப்படவில்லை. அதற்கான சூ ழல் அப்போது இருந்தது. கதைத்திருக்க வேண்டும். பிற்காலத்தில் கதைக்கக் கூடிய சூழல் இல்லை.

தேசம்: நான் குற்றச்சாட்டை உங்கள்மீது வைக்கவில்லை. நீங்கள் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் எல்லாருக்கும் அந்தப் பொறுப்பு இருக்குது தானே. மிக மோசமானது ஏனென்றால், தளத்தில் கொலைகள் நடந்திருக்கு. அதே போன்று ஆரம்ப காலங்களில் பின்தளத்தில் நாலு ஐந்து கொலைகள் நடந்து இருக்கு. அந்த கொலைகள் தொடர்பாக எந்த ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை.

அசோக்: கேட்கப்படவில்லை.

தேசம்: மிகத் துரதிர்ஷ்டவசமான விஷயமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கு. அந்தக் கமிட்டி மீட்டிங் எத்தனை நாள்? எத்தனை நாளுக்கு பிறகு நீங்கள் திரும்பி வாறீங்கள்?

அசோக்: சென்ட்ரல் கமிட்டி மீட்டிங்குக்கு போனால் ஒரு பத்து ,பதினைந்து நாள் நிற்போம்.

தேசம்: அந்தப் பதினைந்து நாளில் அங்கே என்ன மாதிரியான செயற்பாடுகள்?

அசோக்: பயிற்சி முகாம்களுக்கு போவம். தோழர்களை சந்திப்போம். அந்த நேரத்தில், டெசோ மாணவர் அமைப்பு தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலை செய்தது. டெசோவுக்கு பொறுப்பான தோழர்களை சந்திக்க அநேகமாக நான் போய் விடுவன். சென்னையில் கேசவன், அசோகன் என்று பல தோழர்கள் வேலை செய்தாங்க. திருச்சியில் அலெக்ஸ் ரவி வர்மா பொறுப்பாக இருந்தார். இப்போது கனடாவில் இருக்கிறார். இவர்கள் எல்லாம் அப்போது, தமிழ் நாட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் . டெசோவால் பொங்கும் தமிழமுது என்ற இலக்கிய சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது தொடர்பான வேலைகளையும் நான் பார்ப்பேன். இப்போ ஞாபகம் இருக்கு. இந்த சஞ்சிகைக்காக எழுத்தாளர் ஜெயகாந்தனை பேட்டி கண்டிருந்தன்.

தேசம்: 84 ஜனவரி நீங்கள் மத்திய குழுவுக்கு போகும் போது கொலைகள் தொடங்கி விட்டனவா?
ஒன்று ரெண்டு நடந் து விட்டன என நினைக்கிறேன்.

அசோக்: சரியா சொல்ல முடியாமல் இருக்கு எனக்கு. அதுக்குள்ள நடந்ததாக தெரியவில்லை. அதற்குப் பிற்பாடு தான் நடந்தது என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ சென்ட்ரல் கமிட்டியில் கதைக்க வேண்டிய நிலைமையும் வந்திருக்காது.

அசோக்: ஏனென்றால் குறுகிய காலம் தானே. செப்டம்பர் சிறை உடைப்பு, அதற்குப் பிற்பாடு ஜனவரி. அந்தக் குறுகிய காலத்தில் இந்த கொலைகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. எண்பத்தி நான்கில் தான் இந்த கொலைகள் நடக்குது என்று நினைக்கிறேன்.

தேசம்: இதில கட்டுப்பாட்டுக்கு குழு இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்ப தெரியும்?

அசோக்: முதலாவது சென்றல் கமிட்டிக்கு போனதற்குப் பிறகு கட்டுப்பாட்டு குழு இருப்பது தெரியும்.

தேசம்: அது சாதாரண உறுப்பினர்களுக்கும் தெரியுமா ?

அசோக்: சாதாரண உறுப்பினர்களுக்கு மத்திய குழுவில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அப்படி இருக்கும் போது, கட்டுப்பாட்டு குழுபற்றி அறிந்திருக்க வாய்பில்லை. இப்ப புளொட் தோழர்களை கேட்டுப்பாருங்கள் மத்திய குழுவில் யார் யார் இருந்தது என்று. ஏனென்றால், வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. ஜனநாயக மத்தியத்துவம் வாய்ந்த வடிவமாக கீழ் இருந்து உள்வாங்கப்படவில்லை. ஈபிஆர்எல்எஃப் பொருத்தவரைக்கும் எல்லாம் வெளிப்படை. கீழிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். இது மேலிருந்து தானே எல்லாம் தெரிவு செய்யப்படுது. ஜனநாயக வடிவமும் இல்லை. ஜனநாயக தேர்வும் இல்லைத்தானே. கூட்டுச் செயற்பாடு, சுதந்திரமான சிந்தனை முறை என்பது புளொட்டில் இருந்ததில்லை. ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு அமைப்பின் ஸ்தாபனக் கோட்பாடாக இருக்க வேண்டும். ஆனால் யாரும் இது பற்றி அக்கறைப்படவில்லை.

தேசம்: இதுவரைக்கும் புளொட்டின் வரலாறு எழுதுகிறவர்கள் யாரும் இல்லையே.

அசோக் : ஒரு சிலர் நடைபெற்ற சம்பவங்களை எழுதியுள்ளனர். அரசியல் சார்ந்து விமர்சன நோக்கில் எதுவும் வரவில்லை என்றே நினைக்கிறன்.

தேசம்: எத்தனை மத்திய குழுக் கூட்டம் நடந்திருக்கும் ?

அசோக்: மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு தடவை நடக்கும். நாங்கள் நான்கு பேர் இங்கே இருந்து போவோம். 4 பேர் தானே தளத்திலிருந்த ஆட்கள்.

தேசம்: யார்? யார்?

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, தளப் பொறுப்பாளராக யார் இருக்கிறார்களோ அவங்கள். முதல் தளப்பொறுப்பாளராக இருந்தது கேசவன் பிறகு தளப்பொறுப்பாளராக இருந்தது குமரன்.

தேசம்: இந்த நாலு பேரும் தான் கமிட்டி

அசோக்: தள மத்திய குழு

தேசம்: இங்க நடக்கிற பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்கக் கூடியவர்கள் இவர்கள்…

அசோக்: என்ன நடந்தாலும், நாங்கள் தான் பொறுப்பு.

தேசம்: கிட்டத்தட்ட நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், இந்த நாலு பேருமே ஜனநாயக மத்தியத்துவம், புரட்சிகர சிந்தனை உடைய ஆட்களாக தானே இருக்கினம்.

அசோக்: எங்களுக்குள்ள மிக ஒற்றுமை இருந்தது. மனம் திறந்த உரையாடல் இருந்தது. கூட்டு செயற்பாடு இருந்தது . கேசவன் இருந்த போது இது இருக்கவில்லை. தோழர் குமரன் தளப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்த போது நிறைய மாற்றங்கள் முன்னேற்றங்கள் தளத்தில் நடந்தன. பின் தளத்தை நம்பி இருக்கும் போக்கை இக் காலங்களில் நாங்க கைவிட தொடங்கிவிட்டோம்.

தேசம்: நாலு பேரும் தானே தளத்தில் நடக்கிற எல்லாத்துக்கும் பொறுப்பு?

அசோக்: ஆனால் யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதுதான் நடந்த பிரச்சனை.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேலை செய்த தோழர்கள் அரசியல் வளர்ச்சி கொண்ட தோழர்களாக இருந்தார்கள். அவர்களோடு உரையாடவும் இணைந்து செயற்படவும் முடிந்தது. நிறைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தது. நான் அனேகமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது குறைவு. யாழ்ப்பாணத்தில் தொழிற் சங்கங்களில், மாணவர் அமைப்புக்களில், பெண்கள் அமைப்புக்களில் நிறைய வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. மிகத்திறமை வாய்ந்த தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசியல் சார்ந்து செயற்படவும், சுயமாக செயற்படவும் ஆளுமை கொண்ட தோழர்களாக இருந்தார்கள். இதன் பின்னான காலங்களில் ஏனைய மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள் மாணவர், அமைப்புக்களை தீவிரமாக அமைக்கும் பணியையும் செயற் திட்டங்களையும் தொடங்கி விட்டோம். மட்டக்களப்பில், அம்பாறை மாவட்டங்களில் பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்தபோதிலும், தோழர்கள் வரதனும், ராதா கிருஸ்ணனும் அங்கு அமைப்பு வேலைகளை தீவிரமாக செய்தாங்க. அரசியல் வகுப்புக்கள் எடுக்க தோழர்கள் முத்துவும், பிரசாத்தும், பெண்கள் அமைப்பு தோழர்களும் போனாங்க. நானும், தோழர் கௌரி காந்தனும் ஏனைய மாவட்டங்களுக்கு போனேம்.

யாழ்பாணத்தில் நாங்கள் நின்றது மிகக் குறைவு. இக் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் தவநாதன், செல்வம், தெய்வேந்திரம் மாஸ்டர், மனோ மாஸ்டர், ரஜனி, பாபு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தியன், பிரசாத், நந்தன், கோன், வவுனியாவில் பெரியண்ணன், செந்தில் என மிகவும் நல்ல தோழர்கள் வேலை செய்தார்கள். இவர்களோடு உரையாடவும் இணைந்து செயற்படவும் எங்களால் முடிந்தது.

ஆனால், யாழ்ப்பாண நிலமை அப்படி இல்லை. யாழ்ப்பாணத்துக்குள்ள எந்த அதிகாரமும் எங்களுக்கு இருக்கல்ல. ஆரோக்கியமான உறவு நிலையும் இருக்கல்ல.

தேசம்: அதுக்கு யார் பொறுப்பு…

அசோக்: அது ஒரு சிக்கல் தான். யாழ்ப்பாண பொறுப்பு நேரடியாக முகுந்தனிடம் தான் இருந்தது. இங்கு நேசன், கண்ணாடிச் சந்திரன் காலப்போக்கில் சின்ன மெண்டி என இப்படியே போய் விட்டது.

தேசம்: நேசன் மாவட்ட பொறுப்பாளராக இருந்தாலும் அவருக்கு ஊடாக த்தான் எல்லாம்..

அசோக்: நேசன் மாவட்ட பொறுப்பாளர், நாங்கள் மத்திய குழுவில் இருக்கிறோம். நாங்கள் எதுவுமே அங்க செய்ய இயலாது. நேசனை கட்டுப்படுத்த இயலாது. ஏனைய மாவட்ட பொறுப்பாளர்களை நாங்கள் கட்டுப்படுத்தலாம். உரையாடலாம். அவர்களிடம் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். யாழ்ப்பாண உறவுநிலை முழுக்க முழுக்க பின் தளத்தோடு இருந்த உறவு தானே. எங்கள விட அங்க ஒரு சக்தி இருக்கு தானே. அவங்களைப் பொறுத்த வரைக்கும் நாங்க எல்லாம் சாதாரண ஆட்கள். என்ன பிரச்சினை என்றால் பெரியய்யா ஆட்கள் நாங்கள் என்ற போக்கு. கிளிநொச்சி, முல்லைத் தீவில், ஏனைய மாவட்டங்களில் ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் அங்க போவோம் . பிரச்சினையை தீர்ப்போம். யாழ்ப்பாணத்தில் எங்களால் எதுவுமே செய்ய இயலாது. நாங்க நாலு பேரும் டம்மி தான். நேசனின் காலத்தில்தான் காரை நகரில் இயங்கிய சீநோர் படகு கட்டும் தொழிற்சாலை கொள்ளையிடப்பட்டது. யாருக்கும் தெரியாது. இந்த கொள்ளையால், இயங்கி வந்ததொழிற்சாலை மூடப்பட்டது. எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கு முடியவில்லை. இப்படி பல சம்பவங்கள்.

தேசம்: யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை

அசோக்: யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தளப் பொறுப்பாளர், தள மத்திய குழு உறுப்பினர்கள் எல்லாம் வெறும் டம்மி தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து தானே பின் தளத்துக்கு கம்யூனிகேஷன். அப்ப இலேசு அவங்களுக்கு. கேட்டா சொல்லுவார்கள் பெரியய்யா ஓடர்அ துக்கு யார் பொறுப்பு… , பெரியய்யாட்ட நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம். நாம் ஒரு பிரச்சினையை கேட்டால் அதை பெரியய்யாட்ட கதைத்துக் கொள்ளுங்கோ என்பார்கள்.

தேசம்: இது முதலாவது மத்திய குழுக் கூட்டம் இரண்டாவது மத்திய குழுக் கூட்டம் நீங்கள் போய் இருக்கிறீர்கள் அதற்குப் பிறகு நீங்கள் ஒவ்வொரு மத்திய குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு இருக்கிறீர்களா?

அசோக்: கலந்து கொண்டிருக்கிறோம். அனேகமாக நிர்வாக சிக்கல்கள் தான் கதைக்கபடுவது. இந்தக் கொலைகள் கொள்ளைகள் பற்றி எல்லாம் பெருசாக வெளியில தெரியாது தானே. சந்ததியார் முகுந்தன் முரண்பாட்டுக்கு பிறகுதான் அது வெளிக்கிழம்புது.

தேசம்: அப்போ எப்ப இந்த சந்ததியார் முகுந்தன் முரண்பாடு பெரிய பிரச்சினையாக வருது

அசோக்: அது 85 ஆரம்பத்தில்தான்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *