“யாரையும் சும்மா விடக்கூடாது.” – ஆசிரியரின் பாலியல் கொடுமையால் பள்ளி மாணவி தற்கொலை !

தமிழ்நாடு கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி,  ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2  படித்து வந்தார்.

நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது” என்று கைப்பட எழுதியுள்ளார்..

போலீசார் விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார்   ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், சக மாணவர்களுடைய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள், ”மாணவி புகார் கொடுத்தும் பா,லியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மாணவியை மிரட்டி அக்குரூரத்தை மூடிமறைப்பு செய்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்படும் வரை மாணவி உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என்று தெரிவித்தனர். 12 மணி வரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்க இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என பதிவு செய்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *