“இந்த அரசாங்கம் இலங்கை மக்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எனவும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பிரச்சினையை அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளமை மற்றும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத பிரச்சினை ஆகியவற்றினாலேயே இவர்களுக்கு தமது பிரதேசத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய பொலிஸாரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறான விடயங்களினால், இந்த பிரச்சினைகள் வலுப் பெறும் எனவும், மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *