முதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றும், அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும் என்றும் முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 26ஆம் தேதியன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தாங்க முடியாத முதுகு வலியுடன் உள்நோயாளியாக சேர்ந்த முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகளை நடத்திப் பார்த்து, அவரது முதுகுத் தண்டில் எல்.2 – எல்.3 இவற்றுக்கிடையே தசைப் பிடிப்பு இருப்பதை அறிந்து அதற்கு அறுவை சிகிச்சை செய்வது ஒன்றுதான் சரியான வழி என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.
டெல்லியில் இருந்து டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் அவர்களையும் வரவழைத்து கலைஞரைப் பரிசோதிக்கச் செய்தோம். ராமச்சந்திரா மருத்துவ மனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களை தலைமையில் 14 மருத்துவர்களை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அனைவரும் இணைந்து எடுத்த முடிவின்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்தபோது, முதல்வர் கருணாநிதி அவர்களின் இந்த வயதில் இவ்வளவு அபாயகரமானதும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது பற்றி அய்யப்பாடுகள் தோன்றிய போதிலும், வேறு வழியில்லாத நிலையில் அறுவை சிகிச்சையை கடந்த 11ஆம் தேதி மேற்கொண்டோம்.
சுமார் மூன்றரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று அனைவரும் மகிழத் தக்க வண்ணம் முதல்வர் கலைஞரின் முதுகு வலி நீங்கியது. இதுபற்றி அன்றையதினமே செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைக் கூறினோம்.
அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று அவரது உடல்நிலை தேறி வந்தது. அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட ஐந்து தையல்களில் (23.02.09) இரண்டு தையல்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் மூன்று தையல்கள் பிரிக்கப்பட வேண்டும். (25.02.09) டெல்லியில் இருந்து டாக்டர் ஜெயஸ்வால் அவர்கள் மீண்டும் சென்னைக்கு வரவிருக்கிறார்.
அப்போது எஞ்சிய மூன்று தையல்களும் பிரிக்கப்பட உள்ளன. அதன் பின்னரே முதல்வர் இல்லம் திரும்புவது பற்றி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையே வெளியே நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் முதல்வர் கருணாநிதியை, மனோரீதியாகப் பெரிதும் பாதிப்பதும், அந்தப் பிரச்சினைகளிலே அவர் அதிக அக்கறை செலுத்துவதும், ஓய்வெடுக்காமல் அதைப்பற்றியே அதிகாரிகளையும், கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதும, திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருப்பதும் நன்றாக தேறி வருகின்ற அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்துள்ளது.
எனவே அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, உடல்நலம் முழுவதுமாக தேறிய பின்னர் உண்ணாவிரதம் பற்றி யோசித்து முடிவெடுப்பது உசிதமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது அவருடைய உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை என்பதால், இதில் அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும். எங்களுக்கும் மேலாக, எங்களையும் கடந்து தரப்படக் கூடிய நல்ல மருந்தாக அதுதான் இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.