புத்தாக்க அரங்க இயக்கம் 2021 சிறந்த நாடக அமைப்பிற்கான விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பரிசையும் வென்றது!

சிறந்த தமிழ் நாடக அமைப்பிற்கான 2021 சிவஜோதி ஞாபகார்த்த விருதை புத்தாக்க அரங்க இயக்கம் வென்றெடுத்தது. இவ்விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம்நிதியும் அவ்வமைப்பின் ஸ்தாபகர்களான எஸ் ரி குமரன் எஸ் ரி அருள்குமரன் சகோதரர்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று நவம்பர் 18 வயித்தீஸ்வரன் சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் அவருடைய ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் வைத்தே இவ்விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிப்பை எழுத்தாளர் கருணாகரன் அறிவிக்க நாடகக் கலைஞரும் அருட்தந்தையுமான சி யோசுவா விருதை வழங்கினார்.

ஒரு ஆளுமையை அவனது மறைவுக்குப் பின் நினைவு கூருவதும் அவனின் செயற்பாடுகளைக் கொண்டாடுவதும் தான் அவனுக்கு அளிக்கக்கூடிய உயர்ந்தபட்ச கௌரவம் என்று வ சிவஜோதியின்யின் பள்ளித் தோழனும் லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகருமான த ஜெயபாலன் காணொளியூடாக நிகழ்வில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சிவஜோதி ஒரு பன்முக ஆளுமையாக இருந்தாலும் நாடகத்துறையில் அதீத நாட்டத்தைக் காட்டியமையினால் சிறந்த நாடக அமைப்பிற்கு அல்லது நாகக் கலைஞருக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது என்ற தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சைவப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வ சிவஜோதி சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் குரல்கொடுத்து வந்தவன் என்றும் அதேயடிப்படையில் புத்தாக்க அரங்க இயக்கமும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தங்கள் படைப்புகளை உருவாக்கி வருவதால் அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிவஜோதி எழுதிய கட்டுரைகளை அவருடைய துணைவி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்திருந்த ‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலுக்கான வெளியீட்டுரையை சிவஜோதியின் நண்பனும் சிரேஸ்ட்ட கிழக்கு மாகாண கலை கலாச்சார ஆய்வாளர் குணபாலா வழங்கினார். சிவஜோதியின் தந்தை நூலைப் பெற்றுக்கொண்டார். மதிப்பீட்டுரையை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தைச் சேர்ந்தவருமான க விஜயசேகரன் வழங்கினார்.

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதில் நீதிபதியும் தேசிய கலை இலக்கிய பேரவையின் முக்கியஸ்தருமான சோ தேவராஜா சிறப்புரை வழங்கினார். சிவஜோதி என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் சோ தேவராஜாவுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு சந்திரகுமார் சிவஜோதியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்கள் 75 பேருக்கான பள்ளிச் சீருடைகளை சிவஜோதி கல்வி கற்ற விக்ரோரியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சி குணபாலா திருமதி சிவஜோதியிடம் கையளித்தார். கொழும்பு எம் எம் மனேஸ்மன்ற் சேர்விஸஸ் பிரைவேட் லிமிடட் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு வேண்டிய அப்பியாசக் கொப்பிகளை வழங்கினர்.

லிற்றில் எய்ட் உடன் இணைந்து மக்கள் சிந்தனைக் கழகமும் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தவருமான ப தயாளன் தொகுத்து வழங்கினார்.

கோவிட் நெருக்கடி காலநிலையிலும் சமூக இடைவெளியைப் பேணி 200 பேர்வைர இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிவஜோதியின் நினைவுகளை மீட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *