நேற்றுமாலை (நவம்பர் 19) தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லி பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இறந்தவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று மாலை இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இத்தீபத்தை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வண்டிகளும் 40 தீயணைப்புப் படையினரும் முயற்சி எடுத்திருந்த போதும் அவர்களால் வீட்டினுள் தீயில் மாட்டியவர்களை காப்பாற்ற முடியவில்லை.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அந்த வீட்டுக்கு குடிவந்த குடும்பத்தில் கணவர் கடையொன்றில் வேலை செய்பவர். அவருடைய தாயார் தனது பேரப் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக லண்டன் வந்திருந்தவர். அவரது பயண ஏற்பாட்டின்படி அவர் இன்று இலங்கைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்ட் வசமாக நேற்று நடந்த இத்தீவிபத்தில் பேத்தியார், மருமகள் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கீழே கடையில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் இயக்குநர் ஆர் புதியவனின் சகோதரரின் குடும்பத்திலும் மூன்று தலைமுறையினர் உயிரிழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று லண்டன் போன்ற நகர்களில் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்துமே பெரும்பாலும் இலகுவில் எரிந்துவிடக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டே கட்டப்படுவதால் இவ்வாறான தீ விபத்துக்கள் ஏற்படும் போது தீ மிக விரைவில் கட்டிடத்தை ஆக்கிரமித்து விடுகின்றது.
இந்த விபத்தில் இருந்து இவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாமைக்கு இவர்கள் மேல் மாடியில் இருந்ததும் தீ கீழ்ப்பகுதியை ஆக்கிரமித்ததுவுமே காரணம். யோகன் என அறியப்பட்ட கணவர் வீட்டில் இருந்து 20 நிமிட தொலைவில் உள்ள கடையில் பணியாற்றுகின்றார். மனைவி போனில் “நெருப்பு, நெருப்பு எனக் கத்தியதாகவும் அதனால் அவர் உடனே தன்னுடைய வீட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். அதற்குள்ளாக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இப்போது யோகன் அபேவூட்டில் உள்ள தனது சகோதரியுடன் தங்கியுள்ளார். தன்னுடைய மகளின் பெயரைச் சொல்லி அழுதபடியுள்ளார்.
2017 யூன் கிரீன்பீல் ரவர் தீக்கிரையாகி எண்பது கொல்லப்பட்டனர். அதன் பின் இடம்பெற்ற உயிர்ச் சேதம் அதிகமான தீ விபத்து இதுவாகவே உள்ளது.