இலங்கைக்கே சொந்தமான கொவிட் டெல்டா துணை பிறழ்வொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே இந்த புதிய துணை பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். B. 1.617.2.28 என்ற புறழ்வு இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அதன் துணை புறழ்வாக B. 1.617.2.104 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு புறழ்வுகளும் ஒரே சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், B. 1.617.2.28 என்ற வைரஸ் புறழ்வானது, மேல் மாகாணத்திலேயே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.104 என்ற வைரஸ் புறழ்வானது வடக்கு, வடமத்திய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவில் பரவியுள்ளது.
இலங்கையில் B. 1.617.2.104 வைரஸ் புறழ்வினால் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.28 வைரஸ் புறழ்வினால் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். இவை தமது ஆய்வு கூடத்திற்கு கிடைக்கின்ற மாதிரிகளின் ஊடாக மாத்திரமே நடத்தப்பட்ட பரிசோதனை பெறுபேறுகள் என அவர் கூறுகின்றார்.
டெல்டா பிறழ்வை விடவும், மாறுப்பட்ட தாக்கத்தை இந்த வைரஸ் துணை பிறழ்வுகள் செலுத்தும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். துணை புறழ்வுகள் பரவுகின்றமையினால், தடுப்பூசியின் செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், தடுப்பூசிகள் சரியான பெறுபேறுகளை வழங்கும் எனவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துகின்றமையினால், இந்த புறழ்வுகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.