“மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி வருகின்ற மகாவலி திட்டத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்படும் போது, அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரை நிகழ்த்திய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் உரை நிகழ்த்திய அவர்,
இந்த நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கை மையப்படுத்தும் எம்.பி.க்கள் எல்லோரும் கடும் போக்கான தொனியில் தான் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் நோட்டிஸ் ஒட்டி, முதலமைச்சராகி இன்று எம்.பி.யாகவுள்ளேன். அரசாங்கத்துடன்தான் இணந்து செயற்படுகின்றேன். எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்தக் கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகிற அளவிலே அரச நிர்வாகம் செயற்படக்கூடாது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள எங்களின் தனித்துவமான அரசியலை வளர்த்தெடுக்கக்கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்கித்தர வேண்டும்.
அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி வருகின்ற மகாவலி திட்டத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்படும் போது, அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்