புலம்பெயர் தொழிலாளர்களுக்கென தேசியக் கொள்கையொன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்ப நலன்களைக் கருத்திற்கொண்டு இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
இது தொடர்பாக அமைச்சில் நடந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுடனான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு உத்தரவு பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் கடிதம் அவசியமில்லை.
இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்குதல், அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் போன்ற தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமே தீர்மானங்கள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்குமேயன்றி தொழில் வழங்குநர்களுக்கு உதவ முன்வரமாட்டாது. பல்வேறு அமைப்புகளின் தேவைகளுக்கமைய கொள்கைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக வில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்களாக செல்வோர் காப்புறுதி செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் எனக் கூறியமைக்கு காரணம் அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டமையால் தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கட்டணங்களை செலுத்த தவறும் தொழில் வழங்குநர்களின் கீழ் பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப் படமாட்டார்களென்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல கூறியுள்ளார்.