இலங்கையில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, வலியுறுத்தினார். அத்தோடு, நிரந்தர சமாதானத்திற்காக இலங்கை தமிழர்களுடன் அமெரிக்கா இணைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ட்விட்டர் பதிவில்,
இலங்கைத் தமிழ் மக்களுடன் நிரந்தர சமாதானத்தையும், அவர்களின் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முழுக் குரலையும் தேடுவதில் தானும் இணைந்து கொள்வதாக லூ கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும் அவர்கள் வெள்ளை மாளிகை உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.