கிண்ணியா படகு விபத்து – நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை !

அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து குறித்து மேலும் பேசிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றன. எனினும், இந்த மக்களுக்கான மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப் பாலம் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகரசபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது.

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *