சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஃமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், இந்த ஆபத்தான சூழலை ராஜபக்ச அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடித்துச் சிதறும் என்ற அச்சத்துடன் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டில் ஐந்து எரிவாயு கொள்கலன்கள் வெடித்துச் சிதறியுள்ளன. இது எவ்வாறு வெடித்தது. இவ்வளவு காலமும் இத்தகைய அனர்த்தத்தினை மக்கள் எதிர்கொள்ளவில்லை.
இந்த ராஜபக்ஸ அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகின்றது. இன்று சகல வீடுகளிலும் எப்போது வெடிக்கும் என்ற நிலை தெரியாத அளவிற்கு, எரிவாயு கொள்கலன் என்னும் வெடி குண்டை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
இதற்கான முழுப்பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். ஆகவே இந்த ஆபத்தான சூழ்நிலையை நிறுத்துவதற்கு அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.