“கீழ்த்தரமான செயலை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.” – எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் !

முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த நவம்பர் 27ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில்  ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இலங்கை இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியதும் மிகவும் கீழ்த்தரமானதுமாகும்.

குறித்த தினத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது பணியைச் செய்துகொண்டிருந்த வேளை இராணுவத்தினர் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கேட்டுக்கொண்டதையடுத்து தனது அடையாள அட்டையைக் காண்பிக்க முற்பட்ட வேளையே தாக்கப்பட்டார் என்று அறிகின்றோம்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு பின்பு காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டதும் வெறுமனே ஒரு கண்துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம்.

இந்த விடயம் தொடர்பாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இது தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைப்பதற்கான  வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை உரிய அதிகாரிகள் மற்றும் அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் ஊடகத்துறைக்குப் பெரும் சவாலாக அமைகின்றது. அண்மைக்காலங்களில் பல்வேறு தரப்பினருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் போலவே குறித்த இந்தச் சம்பவமும் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும் அவர்களது ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் அமைகின்றது.

தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான விடயங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருந்து பாதிக்கப்படுவோருக்காக எப்போதும் நாம் குரல் கொடுப்போம் – என்றுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *