பாகம் 18: அரசியல் அற்றவர்கள் பொறுப்பான பதவிகளில் – புளொட்டின் மற்றுமொரு முரண்பாடு!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை

ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 18 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 18

தேசம்: நாங்கள் எண்பத்தி நான்காம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் கதைத்து இருக்கிறோம். இந்த காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு பாரிய அளவில் ஆயுதங்கள் எவையும் பெருசாக கிடைக்கவில்லை. ஆனால், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இருந்த அமைப்புகளில் அரசியல் கல்வியூட்டும் விடயங்களை மேற்கொண்டு இருந்தது என்று நினைக்கிறேன். சமூக விஞ்ஞான கல்வியினுடைய உருவாக்கம் அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அது என்ன நடந்தது, அதில யார் யார் தொடர்புபட்டவை. உமா மகேஸ்வரனுக்கு தொடர்பு இல்லாமல் இருந்ததா அல்லது அவர் அதை மறுத்து அப்படியான கல்விவூட்டல்களை நிராகரித்தாரா? அதுகளைப் பற்றி கதையுங்கள் என்ன நடந்தது?

அசோக்: T3S என்று சொல்லப்பட்ட தமிழ் ஈழ சமூக விஞ்ஞான பாடசாலை 1984 யில் சென்னை கே. கே. நகரில் தொடங்கப்பட்டது. மார்ச்சிய அரசியல் கல்வி மற்றும் சமூகவியல், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் சர்வதேச உறவுகள், அபிவிருத்தி திட்டமிடல் இப்படி எதிர்காலத்தை முன் வைத்து இந்த பாடசாலை தொடங்கப்பட்டது. இதற்கு பயிற்சி முகாங்களிலிருந்து தோழர்கள் தெரிவு செய்யப்பட்டாங்க. இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் நிறைய பேர் அந்த வகுப்புக்களை எடுத்தாங்க. அது ஒரு தரமான அரசியல் கல்வி ஏனென்றால், அவர்கள்தான் காலப்போக்கில் தளத்திற்கு வந்து வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும், முகாம்களில் வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும் தான் உருவாக்குவதற்காக தான் அது ஏற்பாடு செய்யப்பட்டது. அதை உருவாக்குவதில் பலருடைய ஆர்வம் இருந்தது. உமாமகேஸ்வரன், சந்ததியார், யோதீஸ்வரன், வாசுதேவா, ரகுமான் ஜான் எல்லா பேரும் சேர்ந்து தான் அதை உருவாக்கியவர்கள்.

தேசம்: அப்படி ஒரு கல்லூரியின் தேவையை எல்லோரும் உணர்ந்து இருந்தவை?

அசோக்: ஓம் எல்லாரும் சேர்ந்துதான் உருவாக்கினது.

தேசம்: அது கடமைக்காக ஆரம்பிக்கப்படவில்லை. உணர்வுபூர்வமாக தான் ஆரம்பிக்கப்பட்டது.

அசோக்: உண்மையில் நல்ல நோக்கத்தோடு நம்பிக்கையோடுதான் ஆரம்பிக்கப்பட்டது. முகுந்தனுக்கு அந்த நம்பிக்கை இருந்ததா என்பது இப்ப யோசிக்கும் போது சந்தேகம்தான். ஏன் என்றால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது இயங்கல்ல. அதில படித்த தோழர்களை பார்த்தீர்களென்றால் அரசியல் ரீதியாக மிக வளர்ச்சி பெற்ற தோழர்களாக தான் இருக்கிறார்கள். லண்டனில் பணிக்ஸ் என்ற தோழர் இப்ப இருக்கிறார். இதில் படித்தவர். அவரோடு அடிக்கடி உரையாடுவேன். அரசியல் மற்ற பல விசியங்களை அவரிடம் அறிய முடியும். சீனு, அரசிளங்கோ, கணன், சாமி இப்படி பல தோழர்கள். அஜீவன் சுவிஸில் இருக்கிறார் அவரும் T3S இல் படித்தவர்தான்.

தேசம்: என்னுடைய சகோதரரும் T3Sல் படித்தவர்தான். அதோட நேதாஜி என்ற பிரேம்சங்கர் என்று அறியப்பட்டவர் அவரும் சமூக விஞ்ஞான கல்லூரியில் படித்தவர்.

அசோக்: இந்த அரசியல் வகுப்பு 40 பேர் கொண்ட வகுப்புக்களாக நான்கு பிரிவுகள் நடத்தப்பட்டது. சுமார் 160 தோழர்கள் அதில் படித்திருப்பார்கள் என நினைக்கிறன். அதன்பிறகு புளொட்டில் ஏற்பட்ட குளப்பங்களும் முரண்பாடுகளும் தொடர்ந்து நடத்த முடியாமல் செய்துவிட்டன. லண்டனில் இருந்து வந்த தோழர் ராஜா நித்தியன் அதற்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் முகாம்களிலும் அரசியல் கல்வி நிறைய ஊட்டப்பட்டது. ஆரம்ப காலங்கள் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. உதாரணமாக பார்த்தீர்களென்றால் பல்வேறு முகாம்களில் இருந்து அரசியல், கலை, இலக்கிய கையெழுத்துப் பிரதிகள் வந்திருக்கு அந்த நேரத்தில். தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் இருந்தவர் ரவி வர்மன் என்று சொல்லி. சில காலங்களுக்கு முன்னர் இறந்திட்டார். அப்ப நாங்கள் அவரை தோழர் மது என்று அழைப்போம். அவரும் பயிற்சி முகாம்மில் இருக்கும் போது தரமான சஞ்சிகை ஒன்றை கொண்டுவந்தார். இப்படி பல சஞ்சிகைகள். தோழர்கள் இப்படி பல ஆக்கபூர்வமான வேலைககளில் ஈடுபட்டார்கள். தெளிவான அரசியலை கொண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சனை என்று கேட்டால், இந்த முகாம்களில் இருக்கின்ற தோழர்களை நிர்வகிக்கின்ற பொறுப்பாளர்கள் அதற்கேற்ற தகுதி வாய்ந்தவர்களாக அரசியல் அறிவு கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் முகுந்தனின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தார்கள். எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் இருக்கல்ல. முதலில் அரசியல் கல்வி ஊட்டி இருக்க வேண்டும். அது இருக்கல்ல. முகுந்தன் விசுவாசி என்ற ஒரு தகுதி இருந்தாலே போதும் பொறுப்புக்களுக்கு வந்து விடலாம் என்ற நிலைதான் இருந்தது. அந்த மன நிலையை மாற்றி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குழுவோ அல்லது மத்திய குழுவோ எந்த அக்கறையும் இதில் கொள்ளவில்லை.

முகாங்களில் இருந்த தோழர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி கொண்டவர்கள். அப்ப என்ன நடக்கும் என்றால் அவர்கள் நீண்ட காலமாக முகாம்களில் இருக்கும் போது ஏற்படும் சிக்கல் இருக்குதானே, முரண்பாடு வரும். அவங்கள் கேள்வி கேட்பார்கள். அரசியல் சார்ந்த உரையாடலுக்கு இவர்கள் பொறுப்பாளர்கள் தயாரில்லை. இவர்கள் வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டம் கொண்டவர்கள்.

தேசம்: முகாமில் இருக்கிற உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக வளர்ந்து இருப்பார்கள். அவர்களை வழிநடத்துற தோழர்களுக்கு அரசியல் கல்வி போதாமை இருக்கு.

அசோக்: ஓம். அவங்கள் நீண்டகாலமாக முகாமில் இருந்தவர்கள் தானே, நாட்டிக்கு போவது தொடர்பாக, யுத்தம் தொடர்பாக, போராட்டங்கள் தொடர்பாக அரசியல் கேள்விகள் கேட்டால் இவங்களுக்கு பதில் தெரியாது. அப்போ முரண்பாடு வரும். காலப்போக்கில் இந்த முரண்பாடு அரசியல் கதைக்கிறவன் எல்லாம் சந்ததியார் ஆள் என்று குற்றம் சுமத்தும் நிலைக்கு போய்விட்டது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் இந்த முகாம் பொறுப்பாளர்களை யார் நியமித்தது. ஏனென்றால் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் தோழர் ஜான் இருந்திருக்கிறார்.

அசோக்: அவர் இராணுவ ஆலோசகர் என்று நினைக்கிறேன்.

தேசம்: கட்டுப்பாட்டு குழுவுக்கு முகாம் பொறுப்பாளர்களை நியமிக்கின்றது தொடர்பா அல்லது அவர்களுக்கு இருக்கின்ற தகுதி தொடர்பா விளக்கம் ஏதும் இருக்கேலயா?

அசோக்: கட்டுப்பாட்டு குழுவுக்கு ஜெயில் பிரேக் நடந்த உடனேயே குறிப்பிட்ட ஆட்களுக்கு பதவி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நேரம் தங்களை சுற்றியுள்ள ஆட்களுக்கு ஏதாவது பதவிகளை கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலை இவங்களுக்கு. குறிப்பாக, முகுந்தனுக்கு இருந்தது. எல்லாருக்கும் ஏதாவது ஒரு அதிகாரமிக்க பதவி கொடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கோ அரசியல் கல்வி பெறுவதற்கோ இவங்கள் தயாரில்லை. சிறையில் அடைக்கப்பட்டு வந்த அவ்வளவு பேருக்கும் மற்ற சுற்றியுள்ள பேர்வழிகளுக்கும் நீங்கள் ஏதோ ஒரு வகையில் பதவி கொடுக்க வேண்டும். அப்போ அவர்கள்தான் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் உட்பட எல்லா பதவிகளுக்கும் நியமிக்கப்படுகிறார்கள்.

தேசம்: அவர்களுக்கு தகுதி இருந்ததோ இல்லையோ சிறையிலிருந்து அதுதான் அவர்களுடைய தகுதியாக..

அசோக்: புளொட்டில் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்து இருப்பார்கள். இதுதான் இவர்களின் ஒரே தகமை. அரசியல் கல்வி அவர்களிடம் இல்லை. புளொட்டின் அரசியல் யாப்பை பார்த்தீர்களென்றால் அது தரமானதொரு அரசியல் கோட்பாடு கொண்டது. அனைத்து அடக்குமுறைகளையும் உடை த்தெறிவோம் என்ற கோஷமே உங்களுக்கு விளங்கும். அரசியல் மட்டங்களில், சமூக மட்டங்களில், கலாச்சார மட்டங்களில் இருக்கிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு கோஷமாக கொள்கையாக தான் அது இருக்குது.

தேசம்: இந்த அரசியல் யாப்பு எல்லா போராளிகளுக்கும் வழங்கப்பட்டதா.

அசோக்: அரசியல் வகுப்புகள் எடுக்கப்பட்டிருக்கு. அந்தநேரம் பார்த்தீர்கள் என்றால் நிர்மாணம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அது இலங்கையினுடைய சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக, சாதியம், பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை எண்பத்தி மூன்று கடைசியிலேயே வெளியிட்டிருக்கு இருக்கு. எண்பத்தி நாலிலும் வந்தது. நாலு ஐந்து சஞ்சிகைகள் வந்திருக்கு. அதில சிவசேகரம், கௌரிகாந்தன் எல்லாரும் எழுதி இருக்கிறார்கள். பெரிய விவாதமே நடந்திருக்கு. அத்தோட spark என்று ஆங்கிலத்தில் அரசியல் சஞ்சிகை வெளி வந்தது.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது ஆரம்ப கட்டத்தில் எல்லாமே ஒரு சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருந்திருக்கு.

அசோக்: அந்த ஆரம்ப பாதையை மிக நிதானமாகவும் ஆரோக்கியமாகவும் முன்னெடுத்திருந்தால் வேறு ஒரு திசைக்கு கொண்டு போயிருக்கலாம். ஏனென்றால் ஆரம்ப காலங்களில் அரசியல் சார்ந்து ஆழ்ந்து எழுதுகிற பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் புளொட்டில் வெளிவந்திருக்கு. புளொட்டின் ஆரம்பகால துண்டு பிரசுரங்களையும், எழுத்துக்களையும், புத்தகங்களையும் பார்த்தீர்களென்றால் மிக அரசியல் சார்ந்த பிரதிகளாகத்தான் அவை இருந்தது. முரண்பாடுகள் வந்ததும் எல்லாம் சிக்கலாக போய்விட்டது.

தேசம்: இதுல ஒரு முக்கியம் என்ன என்று கேட்டால் தங்களுடைய இயக்கத்துக்கு வாற தோழர்களை, உறுப்பினர்களை கல்வி ஊட்டுவது என்பது முக்கியமான விடயம். அந்தக் கல்வியை ஊட்ட வேண்டும் என்ற உணர்வு எல்லார்கிட்டயும் இருந்திருக்கு. ஆனால் அதால வரக்கூடிய பிரச்சனைகளை அடுத்த கட்டத்துக்கு அவர்களைக் கொண்டு போவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அசோக்: உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் சகல மட்டங்களுக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டிருக்க வேண்டும். முதலில் மத்திய குழுவிலிருந்த முழுப்பேருக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் கல்வி சமூக அக்கறை ஜனநாயக பண்பாடு கொண்ட தோழர்களை பொறுப்புக்களுக்கு நியமித்திருக்க வேண்டும்.

தேசம்: நீங்கள் சொல்வதன் படி சங்கிலியன் எல்லோரும் மத்திய குழுவில் இருந்து இருக்கிறார்கள்.

அசோக்: சங்கிலி கந்தசாமி மாத்திரம் அல்ல. பலர் இப்படி. நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒருக்கா மத்திய குழுவுக்கு போவோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு முரண்பாடுகள் வந்த உடனே நாங்கள் போகாமல் விட்டுட்டோம்.

தேசம்: ஏன் நீங்கள் போகாமல் விட்டீர்கள்…

அசோக்: விரக்தியாக போய் விட்டது. ஏனென்றால் அங்க போய் ஒரு பிரயோசனமும் இல்லை.

தேசம்: உண்மையிலேயே இந்த பயணம் உயிரை பணயம் வைத்து போற பயணம். இலங்கையிலிருந்து அடுத்த கரைக்கு போய்ச் சேர வேண்டும். எவ்வளவு நேர பயணம் அது ?

அசோக்: ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலத்தில் போகலாம். அது நேவிய பொறுத்து இருக்கு. நேவி துரத்தி பிரச்சனைப்பட்டால் சிக்கல் தான்.

தேசம்: அப்படி போய் வரேக்க உங்களுக்கு நெருக்கடிகள் இருந்ததா…

அசோக்: ஓம் ஒரு தடவை பயங்கர நெருக்கடி. நான் ஈஸ்வரன், முரளி, தோழர் கேசவன் இரவு 11 மணிக்கு மாதகலிலிருந்து கிளம்பினாங்கள். நாங்கள் போகும் போது நேவி கண்டு விட்டது. அவர்கள் துரத்த தொடங்கி விட்டார்கள். கோடியாக் கரைக்கு போகவேண்டிய நாங்கள் ஓடி ஓடி கடைசியில் பெற்றோலும் முடிந்த நிலையில், அதிகாலை 4மணியளவில் மல்லிப் பட்டணத்தில் கரை ஒதுங்கினோம். இப்படி இந்த கடல் பயணங்களில் பல அனுபவங்கள்.

தேசம்: இலங்கை கடற் பிராந்தியத்தை தாண்டி நேவி கலைத்து அடிக்கிறது.

அசோக்: அவர்கள் துரத்த தொடங்கினால், இந்திய எல்லைக்குள் எல்லாம் வருவாங்க. அது அவங்களுக்கு பிரச்சனை இல்லை. வோட்டில் பின் தளம் போகும் போது பெரிய பயம் தேவையில்லை. இலங்கை நேவி துரத்தி சுட்டாலும், எப்படியோ தப்பித்து இந்தியா கரைக்கு போய்விடமுடியும். ஆனால் அங்கிருந்து கரையை நோக்கி வரேக்க பெரிய ஆபத்துகள். நேவி கண்டால் சிக்கல்தான்.

தேசம்: வரேக்க உங்களுக்கு கரையில் தகவல் தருவதற்கு ஆட்கள் இருந்தவையா?

அசோக்: அப்படி ஒன்றும் இல்லை. ஓட்டி தான் கடற்பரப்பை கண்காணித்துக் கொண்டு வரவேணும்.

தேசம்: வெறும் கண்ணால பார்த்து

அசோக்: கண்ணால தான் பார்க்க வேண்டும். அப்ப எங்களிடம் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை.

தேசம்: அந்த நேரம் பயணங்களில் நிறைய பேர் உயிரிழந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம் எல்லா இயக்கங்களிலும் நடந்திருக்கு.

தேசம்: பாக்கு நீரினை கடலில் விடுதலை போராளிகள் காவியமே படைத்திருக்கிறீனம்.

அசோக்: மிகவும் பரிதாபத்துக்குரிய மரணங்கள் அவை.

தேசம்: இவ்வாறான பயணங்கள் எப்படி நடக்கிறது? கிழமையில் 1, 2 நடக்குமா…

அசோக்: அந்த நேரத்தில் பின்தளத்திற்கு பயிற்சி பெற செல்லும் தோழர்களின் எண்ணிக்கையை பொறுத்து இப்பயணங்கள் நடக்கும்.

தேசம்: அப்போ நீங்கள் இவ்வளவு உயிரை பணயம் வைத்து அங்கே போகும்போது அது மதிக்கப்படுதா?

அசோக்: அதுதான் பிரச்சனை. ஆரம்ப காலத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை தானே இருந்தது. தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், தோழர் சந்ததியார் போன்றவங்க ஒரு அரசியல் சார்ந்து இருக்கேக்க பெரிய நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒருகட்டத்தில் அவங்களுக்குள்ள முரண்பாடு தோற்றம் பெறுவது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சந்ததியாரின் ஆளும் இல்லை முகுந்தனின் ஆளும் இல்லை. தளத்திலே பொறுப்பு நாங்கள் அவ்வளவுதான்.

தேசம்: உங்களுக்கு இவர்களுடைய தொடர்பு …

அசோக்: மிகக் குறைவு எங்களுக்கு. பின்தளம் போனால் மாத்திரம் சந்திப்போம். உரையாடுவோம்.

தேசம்: உங்களுக்கு ஆரம்பத்திலேயே… நீங்கள் கிழக்கு மாகாணம் என்றபடியால் ரகுமான் ஜானுடன் ஏற்கனவே தொடர்புகள் இருக்கு.

அசோக்: எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த தோழர்கள் ரகுமான் ஜான், சந்ததியார், பார்த்தன், சலீம், வாசுதேவா போன்றவர்கள்தான். உமா மகேஸ்வரனை எல்லாம் பின் தளத்தில் வைத்து தான் நான் சந்திக்கிறேன். அரைவாசிப் பேரை சென்ட்ரல் கமிட்டியில் தான் சந்திக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க பின் தளத்துல போயிருக்கிற நேரம் ரகுமான் ஜான், சந்ததியார், சலீம் இவர்கள அங்க சந்தித்து உரையாடுறனீங்களா? உரையாடக்கூடியதா இருந்ததா?

அசோக்: ஒரு காலகட்டத்தில் சலீம் பிடிபட்டு சிறைக்கு போயிட்டார். அவர் சென்ட்ரல் கமிட்டிக்கு வாறது இல்லை. ரகுமான் ஜான், சந்ததியர் எல்லாரையும் சென்றல் கமிட்டியில் சந்திப்பன்.

தேசம்: அங்கதானே நீங்கள் ஒன்றும் கதைக்கிறதில்லை.

அசோக்: தனிப்பட்ட வகையில் உரையாடுவோம் …

தேசம்: அந்த உரையாடல்கள் ஆரோக்கியமாக இருந்ததா? அந்த உரையாடல்களில் நீங்கள் இயக்க பிரச்சனைகள் பற்றி கதைப்பீர்களா? பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் கூட்டத்துக்கு வெளியில இன்னொரு கூட்டம் நடக்கும். அந்தக் கூட்டத்தில் தான் கூடுதலாக முக்கியமான விடயங்கள் பேசப்படும். மனம்விட்டு நிறைய பேசக் கூடியதாக இருக்கும். அவர்கள் பிரிந்து போவது சம்பந்தமாக அல்லது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளேக்க அதற்கான ரெக்ரூட்மெண்ட்ஸ் வேறயாட்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள். அப்படி அந்த வகையில உங்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்ததா?

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி வரைக்கும் அவர்கள் எங்களிடம் முரண்பாடுகள் பிரச்சனைகள் பற்றி கதைத்தது குறைவு . தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சிக்கு போனதால் மத்தியகுழு கூட்டங்களுக்கு வந்தது குறைவு. அவரை அக்காலங்களில் சந்தித்ததும் குறைவு. ஆரம்பகாலங்களிலும் கடைசி காலங்களிலுதான் அவரை சந்திக்க முடிந்தது.

முரண்பாடுகள் வரேக்க தானே இது பற்றிய உரையாடல்கள் வரும். அதிருப்திகளை சொல்லுவாங்க. ஆனா 84இல் நடுப்பகுதியில் அந்த முரண்பாடு வந்துட்டுது. கொலைகள், சித்திரவதைகள் பற்றிய வதந்திகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. ஆனால் கமிட்டியில் கதைக்க மாட்டாங்க. அடுத்தது நாங்களும் கதைக்க இயலாது. கதைத்தால் முகுந்தன் கேட்கும் எப்படி உங்களுக்கு தெரியும் என்று. பிறகு ஆதாரம் கேட்பார். ஒருதடவை நான் கேட்டு முகுந்தன் டென்சன் ஆகி. இதைப்பற்றி போன உரையாடலில் கதைத்திருக்கிறன்.

தேசம்: முகுந்தனுக்கு இருக்கிற அதே அதிகாரம் தானே சந்ததியருக்கோ, ரகுமான் ஜானுக்கோ, சலீமுக்கோ உங்களுக்கோ இருந்தது.

அசோக்: ஆரம்ப காலங்களில் இவங்களுக்கு கட்டுப்பாட்டுக் குழுக்கு அதிகாரம் இருந்தது. அதை இவங்க ஆரோக்கியமாக பயன்படுத்த தவறிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை நான் வைக்கிற விமர்சனம் என்ன என்று கேட்டால் முகுந்தன் உடைய அதிகாரம் வளர்வதற்கான காரணம் நாங்கள் தான். இது தொடர்பா முன்னமே கதைத்திருக்கிறன்.

தேசம்: சொன்ன விஷயம் எல்லாம் வைத்து பார்க்கும்போது அந்தப் பலத்தை முகுந்தன் தக்க வைத்துக் கொண்டதற்கு முதல் எல்லோரும் கிட்டத்தட்ட சம பலத்தில் தான் இருந்திருக்கிறீர்கள். அப்போ எங்கேயோ ஒரு இடத்தில் தளர்வு ஒன்று நடக்குது. முகுந்தனிட்ட இந்த அதிகாரங்கள் எல்லாம் கை மாறுது. அதற்கு இவர்களும் துணையாக இருந்து இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி எழுகின்றதல்லவா?

அசோக்: ஆரம்ப காலத்தில் இந்த முரண்பாடு வரேக்க ஒரு உரையாடலை செய்திருக்கலாம். எல்லாரும் வளர்ந்த தோழர்கள். காலப்போக்கில் இந்த முரண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக கூர்மையடைந்த படியால் முரண்பாட்டுக்கான காரணங்கள் ஆராய்ப்படவும் இல்லை களையப்படவும் இல்லை. அது கூர்மை அடைந்ததுதான் மிச்சம்.

தேசம்: குறிப்பா மத்திய குழுவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு என்னவென்றால். கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் அமைப்பில் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அமைப்பு. அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை இந்த மத்திய குழு உறுப்பினர்களுக்கு இருக்கு.

அசோக்: நாங்கள் எங்களுக்குள் பிரச்சனைகள் இந்த அதிகாரத்தனம், தன்னிச்சையான போக்குகள் பற்றி கதைப்பம். தீர்வு காணக் கூடிய எந்த வல்லமையும் அதிகாரமும் தளத்தில் இருந்த எங்களுக்கு இருக்கல்ல. அத்தோட பின் தளத்தை பொறுத்தவரை நாங்க அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பின் தளத்தில் நாங்க மனம் விட்டு கதைக்கக் கூடிய தோழராக தங்கராஜா தோழர் ஒருவர்தான் எங்களுக்கு இருந்தார். மற்றவர்களோடு கதைக்க பயம் இருந்தது. எல்லோரும் முகுந்தன் விசுவாசிகளாகத்தானே இருந்தாங்க.

தேசம்: ஆனால் அவர் மத்திய குழுவில் இருக்கிறாரோ.

அசோக்: மத்திய குழுவில் இல்லை. அவர் தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அவர் சொல்லுவார். இவங்கள் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை அழிக்கப் போறாங்கள் என்று. எங்கட கௌரவத்துக்காக நாங்கள் மத்தியகுழு என்று சொல்லிக் கொண்டோமே ஒழிய எந்த பிரயோசனமும் பின் தளத்திலும் இல்லை. தளத்திலும் இல்லை.

தேசம்: அது நேரடியாக உமாமகேஸ்வரன் என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.

அசோக்: உமா மகேஸ்வரனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

தேசம்: மற்றவர்கள் கதைக்க முற்படவில்லை

அசோக்: முடியாது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு தவறு நடந்தால் நாங்கள் கட்டுப்படுத்த இயலாது. ஒரு கட்டத்துல நாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறதில்லை. ஈஸ்வரன் கிழக்கு போயிருப்பார். முரளி வன்னிக்கு போயிருப்பார். நான் நான் தொழிற்சங்க, மாணவர் அமைப்பு வேலைக்காக கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவுக்கு போயிட்டே இருப்பேன். ஏனென்றால் நின்று பிரயோசனம் இல்லை. நின்றால் உங்களுக்கு மண்டை வெடிக்கும். தன்னிச்சையான போக்கு ஆரம்பத்தில் இருந்தே. இதைப் பற்றி போன உரையாடல் ஒன்றில விரிவாக கதைத்திருக்கிறன் என நினைக்கிறன்.

தேசம்: இதை யாழ்ப்பாணத்துக்கு உரிய குணாம்சமா? அல்லது வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இதை காணக்கூடியதாக இருந்ததா

அசோக்: நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான். நில உடமைக் குணாம்சங்களோடு இணைந்த மத்திய தரவர்க்க மனோபாவம் என்பது, இலங்கையில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சாதிய, மத மேலாதிக்க மனநிலையும் அதன் அடையாளங்களும் சேர்ந்து தொழிற்படும் போது இதன் வெளிப்பாடும் தாக்கமும் அதிகமாக இருக்கப் பார்க்கும். இது சமூகத்தில் இயல்பானது. இவற்றை மாற்றி அமைக்கத்தானே நாம் போராட வேண்டும். நீண்ட நெடுங்காலமாக எங்களிட்ட ஊறிப்போன இவ்வாறான குணாம்சம் குறிப்பிட்ட காலத்தினுள் எங்களிட்ட இருந்து மாறிப்போகும் என்று நாம் எதிரபார்க்க முடியாதுதானே.

ஆனா அதற்கெதிரான போராட்டம் முயற்சி அவசியம். அதற்கு மார்க்கிய அரசியல் கல்வி அவசியம். அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்கள் அவசியம். இல்லாட்டி நாங்க அதிகார ஆசை கொண்ட ஆட்களாக, ஒரு அதிகார வர்க்கமாக தான் இருப்பம். ஒரு ஏ.ஜி.ஏ டிவிசனில் இருப்பவர் ஏஜி ஆக அதிகார மனநிலை இருப்பர். மாவட்ட அமைப்பாளர் மாவட்ட ஜி ஏ மாதிரிதான் நடப்பார். மக்கள் மத்தியில் அதிகாரம் காட்டப்படும். மக்கள் எங்களுக்கு அன்னியமாக தெரிவாங்க. அதிகார இருத்தலுக்கு ஆயுதம், வாகனங்கள் தேவைப்படும். நடத்தல், சாதாரண சைக்கிள் பயணம் எங்களுக்கு தேவைப்படாது.

தங்களை அர்ப்பணித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி மக்களுக்குரிய விடுதலையை பெறுவதற்கான உணர்வு இவ்வாறான ஆட்களிடம் இருந்ததே இல்லை.

தேசம்: மற்றது யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கல்வி கற்று அதற்குள் இருந்து வாரவர்களுக்கான ஒரு தெனாவட்டு இருக்கு என்று சொல்லுவார்கள் தானே.

அசோக்: அந்த கல்லூரி என்று இல்லை, பொதுவாகவே மத்திய தர வர்க்கத்துக்கான குணாம்சம் இப்படித்தான் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வதில் சில உண்மைகள் உண்டு. இது யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்கு மாத்திரம் அல்ல, இந்து மத அடிப்படைகளை, சாதிய உணர்வுகளை கொண்ட பல பாடசாலைகளுக்கு இது பொருந்தும். இயக்கங்களில் மிக மோசமான நடத்தை கொண்டவர்கள் அதிகார மனநிலை கொண்டவர்கள் இந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள்.ஆனால் இவற்றை பொதுமைப்படுத்தக் கூடாது.

யாழ்ப்பாண சமூகத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டால் ஒன்று படித்தால் உங்களுக்கான பதவி உத்தியோகம் வேண்டும். அது இயக்கங்களுக்கு வரும்போது அந்த எதிர்பார்ப்பு இருக்கு அவர்களிடம். ஒரு ஆள் மொரட்டுவ யுனிவர்சிட்டியில் ஆர்க்கிடெக்ட் படித்துக்கொண்டு இடையில் வந்தால் அவர் வந்து கீழ் மட்டங்களில் வேலை செய்ய மாட்டார்.

தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இன்றைக்கு இருக்கிற பாராளுமன்ற அரசியலை தான் அன்றைக்கு இயக்கங்களும் பிரதிபலித்த மாதிரிதான் எனக்கு தெரியுது. மிதவாத கட்சிகளில் சேர்ந்து எங்கள் என்றால் உங்களுக்கு பாராளுமன்ற பதவி கொடுக்கப்பட வேண்டும். ஆசனங்களுக்காக ஃபைட் பண்ணுவினம். ஆசனங்கள் வழங்கப்படாட்டி கட்சியை விட்டு வெளியேறுவது இப்படியான நடைமுறைகள் இருக்கும். கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்…

அசோக்: அப்படித்தான். இதுபற்றி முன்னர் உரையாடி இருக்கிறம்.

தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இப்ப நாங்கள் குறிப்பாக பேச வேண்டியது அதிகாரம் எங்க இருக்கோ அதைப் பற்றித்தான் பேச வேண்டும். அதிகாரம் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் தான் குவிக்கப்பட்டிருக்கு. இவ்வளவு காலமும் என்னுடைய பார்வை அதற்குள் குறிப்பிட்ட ஆட்கள் முற்போக்காளர்கள் இடதுசாரி பார்வை கொண்டவர்களாக தான் நான் பார்த்தேன். உங்களோடு இவ்வளவு நேரம் நடந்த உரையாடலில் எனக்கு அந்த வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. சில வேளை அவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை வைத்து இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் அப்படி இருந்த மாதிரி தெரியவில்லை.

அசோக்: இடதுசாரி என்பது வெறும் கருத்தியல் சார்ந்த வெறும் அறிவாக இருக்காது. அது ஒரு வாழ்க்கை முறை. வட இலங்கைக் கம்யூனிஸ்ட் பாட்டிகளை பார்த்தீர்களென்றால், சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை செய்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மக்களோடு மக்களாக வேலை செய்தார்கள். சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்கள். அவர்கள் இடதுசாரிகள். இவர்கள் தங்களை இடதுசாரியாக சொல்லுகின்ற நபர்களேயொழிய இடதுசாரியத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. அது நான் உட்பட எல்லாருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் நாங்கள் மிக நேர்மையாக, மார்ச்சிய உணர்வு கொண்டவர்களாக இருந்திருந்தால், புளொட் இந்த அளவுக்கு போயிருக்காது. புளொட்டின் அழிவுக்கு எல்லோரும் பொறுப்பேக்க வேண்டும். அது சந்ததியாராக இருந்தால் என்ன, உமாமகேஸ்வரனாக இருந்தால் என்ன, நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பொறுப்புக்கூற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. நாங்கள் இன்னொருவரை குற்றம்சாட்டி போக இயலாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *