இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கம் பின்வாங்குவதை தொடர்ந்தால், நாடு பேரழிவைச் சந்திக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபையில் இன்று(04) உரையாற்றிய போதே அவர் மேந்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு, சில நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவுமாறு கோரியதாக குறிப்பிட்டார்.
தீர்வு விடயம் குறித்து ஜனாதிபதியால் கடந்த ஜுலை மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பின்னர் அது பிற்போடப்பட்டது. அது விரைவில் நடைபெறும் என்றும், மற்றுமொரு திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு, 5 மாதங்கள் ஆகின்றன.
இந்த சந்திப்பு கட்டாயமாக நடைபெற வேண்டும். தீர்வுக்கான அடிப்படைகள் ஏற்கனவே பல தடவைகள் எட்டப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னோக்கி செயற்பட்டால், அதனுடன் இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
நாம் சர்வதேசத்தின் ஆதரவையும் கோருவோம். இந்தப் பிரச்சினை தொடரக்கூடிய பிரச்சினை அல்ல என்பதை சர்வதேசம் அறிந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைக் கண்டறிய வேண்டும்.
அதேவேளை சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஏற்கனவே அரசாங்கம் இணங்கியுள்ளது. எனவே அதிலிருந்து பின்வாங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.