அடுத்து வரும் தங்களது ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக தன்னை நியமிப்பதாக கட்சித் தலைவர் தெரிவித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மாசல் சரத் பொன்சேக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்க்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அடுத்த அரசில் எனது பணிகளை நிறைவு செய்ய முழு அதிகாரம் தருவதாகவும் தலைவர் தெரிவித்தார். அடுத்த ஐக்கிய மக்கள் சக்தி அரசொன்று உருவாகும். அதில் நான் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவேன். மோசடியுடன் தொடர்புள்ளவர்கள் இருந்தால் எதிர்தரப்பில் மட்டுமன்றி எமது தரப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.
எல்.ரீ.ரீ.ஈ நினைவு கூரல்கள் தற்பொழுது நடைபெறுகிறது. தேசிய மட்டத்தில் முடிவு எடுத்து அவற்றை நிறுத்த வேண்டும். இந்த விடயத்திற்கு எனது கட்சித் தலைவரினதும் கட்சியினதும் அனுமதி உள்ளது. அதனால் பொறுப்புடனே சொல்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாதுகாப்பு செயலாளரை கோருகிறேன். இறந்தவர்களை நினைவு கூருவதாக சொல்கின்றனர். அதில் பிரச்சினை கிடையாது. அதற்கு பிரபாகரனின் பிறந்தநாளை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பிரபாகரனை அவரது குடும்பத்தினரால் நினைவு கூரமுடியும்.
பிரபாகரனின் பிறந்த தினத்தில் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை ஏற்க முடியாது. புலிகள் இயக்கத்தை தொடர்புபடுத்தி நினைவு கூருவது சட்டவிரோதம். புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.எல்.ரீ.ரீ. ஈ நினைவு கூரலும் ஜே.வி.பி நினைவு கூரலும் ஒன்றல்ல. அரசியல் மாற்றம் ஏற்படுத்தவே ஜே.வி.பி முயன்றது. நாட்டை பிரிக்க அவர்கள் முயலவில்லை என்றார்.