“மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றுபடுங்கள்.” – இந்து சமுத்திர பிராந்திய நாடுகளிடம் கோத்தாபாய ராஜபக்ஷ கோரிக்கை !

தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று மாலை ஆரம்பித்த இந்து சமுத்திர மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

உயிர்களைக் காப்பாற்றுவது என்பதை விலை மதிக்க முடியாவிட்டாலும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அதிக செலவை ஏற்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றன கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வல்லரசு நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளால் மாத்திரமே, அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும்.

அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில், கொவிட் – 19 தொற்றுப் பரவல் இல்லாமல் போகப்போவதில்லை.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, வல்லரசு நாடுகள் உதவி புரிய வேண்டுமென்றும். உலகளாவிய தொற்றுப் பரவலைத் தடுக்கும் வேலைத்திட்டத்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலைமைத்துவம் வழங்கி வருகின்ற போதிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு, எந்தவோர் உலக அமைப்பும் உதவ முன்வரவில்லை.

தொற்றுப் பரவலென்பது, வறிய மற்றும் வல்லரசு நாடுகளை ஒரே விதத்தில் பாதிப்படையச் செய்திருப்பினும், வீதத்தின் அடிப்படையில், பாதிப்பின் சுமைகளை வறிய நாடுகளே தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான காலமாகும். தொற்று நோயால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளுக்கு கடன் மன்னிப்பு வழங்கல், மறுசீரமைப்பை மேற்கொள்ளல் அல்லது கடன் நிவாரண காலங்களை வழங்க வல்லரசு நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

தொற்றுநோய் அனுபவத்தின்படி, ஒரு நாட்டில் உள்ள பாதகமான நிலைமைகள், விரைவாக பிராந்தியத்துக்கும், இறுதியில் உலகம் முழுவதும் பரவக்கூடும். அதனால்தான், தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் விடயங்களில் நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க – பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் தொடர்பாக நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டும்.

மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாக தற்போதைய காலநிலை நெருக்கடி காணப்படுகிறது.எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவு என்பது, ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல், கூட்டு முயற்சியால் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இவ்விரு சம்பவங்களையும் சுட்டிக்காட்டக் காரணம், அபாயகரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களைக் கடற்பரப்புக்குள் கொண்டுசெல்வதில் கடுமையான கட்டுப்பாடுகளின் அவசரத் தேவை காணப்படுவதால் ஆகும். நவீன உபகரணங்களுடன் கூடிய இழுவைப் படகுகள் மூலம் எல்லைகடந்த கடற்பகுதியில் மீன்பிடிப்பது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது.

இதனால், தேசிய அளவில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டிருக்கும் வறிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சூழலையும் உள்ளூர் பொருளாதாரங்களின் நம்பகத்தன்மையையும் பராமரித்தல் போன்ற பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கியமாகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் மையமாகக் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரமானது, பிராந்திய நாடுகளுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதென்பதையும், புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.

மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறானதொரு நடவடிக்கையும் ஒருங்கிணைவும், ஒத்துழைப்புமே அவசியமாக உள்ளது. பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்குத் தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், இவ்வாறான ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது என்பதையும்,

இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து இவற்றை இல்லாது ஒழிக்கவில்லையாயின், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றன சுலபமாக இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகள் மற்றும் அந்தக் கடலைப் பரவலாகப் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொது நலன்கள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்துக்காக – 2016ஆம் ஆண்டில், “இந்து சமுத்திர மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது.

இதன் நான்காவது மாநாடு, 2019ஆம் ஆண்டில், மாலைதீவில் இடம்பெற்றதோடு, அதன்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வழக்கத்துக்கு மாறான சவால்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

“சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல்” என்ற தொனிப்பொருளில், இந்த முறை மாநாடு இடம்பெறுகின்றது.

“இந்து சமுத்திரத்தின் ஊடாகப் பல்தரப்பு செயற்பாடுகளுக்கான அரங்காகச் செயற்படக்கூடிய, பயன்மிக்க கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், வழிகாட்டி உள்ளார். சமுத்திரத்தின் அழகு மற்றும் உயிரியல் பல்வகைமையை எமது எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதன் மூலம் சுற்றாடல் மாசடைவதன் காரணமாக, இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைக்க நாம் இன்றே தொடங்க வேண்டும்” என்று – ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சாய்ட் பாட்ர் பின் ஹமாட் பின் ஹமூட் அல் பூசயிட் அவர்கள் தனது நேற்றைய சிறப்புரையில் குறிப்பிட்டார்.

“அதிகப் பொறுப்புக்களை வகிப்பதற்கும், தமக்கடையே மிகவும் சிறந்த தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டிய நிலை, இந்து சமுத்திர நாடுகளுக்கு இன்று ஏற்பட்டுள்ளது’ என்றும்,

“கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை இயல்வு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் வரவேற்புக்களுடன் விரைவான புதிய பொதுமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டும்” என்றும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தனது  சிறப்புரையின் போது குறிப்பிட்டார்.

18 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர், இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *