இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயதான சகோதரியை அவரது இளைய சகோதரன் (17) தலை துண்டித்துக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் துண்டிக்கப்பட்ட தலையுடன் சிறுவனும் அவரது தாயும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியிலிருந்து குறித்த புகைப்படம் நீக்கப்பட்டு, பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், சந்தேக நபர்களான சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்தச் சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றினை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த செயலைச் செய்துள்ளதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் கடந்த ஜூன் மாதம் 20 வயதான இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும், வீட்டை விட்டு வௌியேறி காதல் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களைக் கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர்.
திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் அவர்கள் இருவரும் சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளதுடன், அதன்போது குறித்த பெண்ணின் பின்புறமாகச் சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் தாயும் மகனுமாகச் சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.
மேலும் அந்தச் சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன், அவர் அவ்விடத்தை விட்டு வௌியேறி உயிர் தப்பித்துக் கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கொலை செய்யப்படும் போது குறித்த பெண் கர்ப்பம் தரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.