இஸ்லாமின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
சியல்கொட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடிப்படைவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகள் சுற்றிவளைத்திருந்த போது அவரை பாதுகாப்பதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து போராடியிருந்த மாலிக் அத்னன் என்பவரின் செயலை பாராட்டி சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான்,
2014 ஆம் ஆண்டு பெசாவரில் பாடசாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முழு நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று பட்டதைப் போல, சியல்கொட் சம்பவத்தை அடுத்து முழு பாகிஸ்தானும் இனி இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறக்கூடாது என்பதில் ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த கொடூரம் இடம்பெற்ற போது தமது உயிரைப் பற்றி கவலைபடாமல், மாலிக் அத்னன் பிரியந்த குமாரவை பாதுகாக்க முயற்சித்தமை சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறினார்.
இதற்காக அவருக்கு “தம்ஹா ஐ சுஜாத்“ என்ற அதி உயர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.