2018 மற்றும் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு பகுதியில் திட்டமிடாத வகையில் மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த போது வடக்கு மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு சுமார் ஏழரை லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு சிறிய தொகையே வழங்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம், 70 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிடாது செயற்பட்டமையினால் இன்று நாடு முழுவதும் பல ஆயிரம் மக்கள் புதிய வீட்டு திட்டத்தில் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர்.
அவர்களில் இன்று பலர் கடனாளியாகியுள்ளனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.