ஆரம்பித்தது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் – முதல் இனிங்சில் 147 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து !

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சினால் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டார்க் விக்கெட்டை கைப்பற்றி சாதித்தார். ரோரி பர்ன்ஸ் முதல் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதைத்தொடர்ந்து டேவிட் மலான் 6 ஓட்டத்திலும், கேப்டன் ஜோரூட் ஓட்டம்  எதுவும் எடுக்காமலும் ஹசில் வுட் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

11 ஓட்டங்களில் இங்கிலாந்து 3 விக்கெட்டை பறிகொடுத்தது. தலைவர் கம்மின்ஸ் தனது அபாரமான பந்து வீச்சினால் பென் ஸ்டோக்ஸ் (5 ஓட்டங்கள்), ஹசீப் ஹமீது (25ஓட்டங்கள்) ஆகியோரை அவுட் செய்தார். 60 ஓட்டங்களில் 5 விக்கெட்டை அந்தஅணி இழந்தது.

6-வது விக்கெட்டான ஆலிவர் போப்-ஜோஸ் பட்லர் ஜோடி சிறிது தாக்குப்பிடித்து ஆடியது. இந்த ஜோடியை ஸ்டார்க் பிரித்தார். பட்லர் 39 ஓட்டங்களில் அவரது பந்தில் வெளியேறினார்.

ஆலிவர் போப் 35 ரன்னில் கிரீன் பந்தில் ஆட்டம் இழந்தார். 8-வது விக்கெட்டாக ஆலிவர் ராபின்சன் ஓட்டம் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். 122 ஓட்டங்களில்  இங்கிலாந்துஅணி 8 விக்கெட் இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

ஸ்கோர் 144 ஆக இருந்த போது 9-வது விக்கெட்டாக மார்க் வுட் அவுட் ஆனார். அவர் 8 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி 50.1 ஓவர்களில் 147 ஓட்டங்களில் சுருண்டது.  கடைசி விக்கெட்டாக கிறிஸ் வோக்ஸ் 21 ரன்னில் வெளியேறினார்.

கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க், ஹசில் வுட் தலா 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *