கிராம மக்கள் 11 பேரை உயிரோடு கொளுத்திய மியன்மார் இராணுவம் – வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேசம் !

மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300 இற்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *