வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும் அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம். அதற்கான திட்டங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். அத்துடன் கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே எமது இலக்கு. கடன் இல்லாத நாட்டையே நாங்கள் அடுத்துவரும் அரசாங்கத்துக்கு ஒப்படைப்போம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே வரவு செலவு திட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றேன். தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பிரச்சினையில் இருக்கின்றது. என்றாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் தேவையான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
விசேடமாக வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும் அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம். ஜனவரி மாதம் 500 டொலர் மில்லியன் வழங்க இருக்கின்றது. ஜூலை மாதம் ஆயிரம் டொலர் மில்லியன் வழங்க இருக்கின்றோம். நாங்கள் பெற்றுக்கொண்ட கடன் தொகையும் இருக்கின்றது. அனைத்தையும் அடுத்த வருடத்தில் வழங்குவோம் என்றும் கூறினார்.